போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி: பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்பு

தண்டையார்பேட்டை: சென்னை யானைகவுனி காவல் நிலையம் சார்பில் நேற்று மாலை போலீசாரின் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் அப்பகுதியை சேர்ந்த மாநகராட்சி பள்ளி மாணவ-மாணவிகள் 300 பேர் பங்கேற்றனர். இப்பேரணியை உதவி ஆணையர் பாலகிருஷ்ண பிரபு கொடியசைத்து துவக்கி வைத்தார். இப்பேரணியில் யானைகவுனி போலீஸ் இன்ஸ்பெக்டர் புஷ்பராஜ், போக்குவரத்து ஆய்வாளர் ஜெயபிரகாஷ் மற்றும் போலீசார் பள்ளி மாணவர்களுடன் இணைந்து போதை ஒழிப்பு விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பினர்.

இப்பேரணி தங்கசாலை தெரு, அண்ணா பிள்ளை தெரு, ஆதியப்ப தெரு, ரமணன் தெரு, சென்ட்ரல் வால்டாக்ஸ் ரோடு என 4 கிமீ தூரத்துக்கு மாணவர்கள் போலீசாருடன் இணைந்து டிரம்ஸ் வாசித்தும், பதாகைகள் ஏந்தியும் விழிப்புணர்வு கோஷங்கள் எழுப்பியபடி நடந்து சென்றனர். வழிநெடுகிலும் மக்களிடம் போதை பழக்கத்தை விட்டுவிடும்படி துண்டு பிரசுரங்கள் வழங்கி மாணவர்கள் வலியுறுத்தினர்.

பின்னர் பேரணியில் பங்கேற்ற மாணவ-மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக, போலீசார் நோட்டு புத்தகங்கள், பேனா உள்ளிட்ட பல்வேறு கல்வி உபகரணங்களை வழங்கினர். இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி போதை பழக்கத்தை கைவிடுவதற்கு மாணவர்களையும் பொதுமக்களையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்தது என போலீசார் தெரிவித்தனர்.

Related Stories: