செல்போன் கோபுரம் அமைக்க மக்கள் எதிர்ப்பு

வேளச்சேரி: வேளச்சேரியில் வீட்டுவசதி வாரிய குடியிருப்பு பகுதியில் ஒரு தனியார் செல்போன் கோபுரம் அமைப்பதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து, அவரது வீட்டை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வேளச்சேரி, தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு, 7வது தெருவை சேர்ந்தவர் பாண்டுரங்கன் (53). கல்லூரி பேராசிரியர். இவர், தனது வீட்டின் பின்புறம் காலியாக உள்ள இடத்தில், கடந்த சில நாட்களுக்கு முன் ஒரு தனியார் செல்போன் நிறுவனம் உயர்கோபுரம் அமைக்க வாடகைக்கு விட்டுள்ளார். அங்கு நேற்று செல்போன் உயர்கோபுரம் அமைக்கும் பணிகளில் அந்நிறுவன ஊழியர்கள் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவலறிந்ததும் நேற்று மாலை அப்பகுதியை சேர்ந்த 100க்கும் மேற்பட்டோர் பாண்டுரங்கனின் வீட்டை முற்றுகையிட்டு, அங்கு செல்போன் உயர்கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு வேளச்சேரி போலீசார் விரைந்து சென்று, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் சமரசப் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து, பாண்டுரங்கன் வீட்டின் பின்புறம் செல்போன் உயர்கோபுரம் அமைக்கும் பணிகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. இதில் அப்பகுதி மக்கள் சமாதானமாகி கலைந்து சென்றனர். இதனால் அங்கு ஒரு மணி நேரத்துக்கு மேல் பரபரப்பு நிலவியது.

Related Stories: