திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் ரூ18 கோடியில் கும்பாபிஷேக திருப்பணிகள் துவக்கம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பூந்தமல்லி: திருவேற்காடு ஸ்ரீதேவி கருமாரியம்மன் கோயில் ராஜகோபுரம் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் துவக்க விழா நேற்று கோயில் வளாகத்தில் நடந்தது. இதில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு பங்கேற்று, திருப்பணிகளுக்கான பூஜைகளை துவக்கி வைத்தார். முன்னதாக, கோயில் மூலவர் உற்சவர் மற்றும் பிரகாரத்தில் உள்ள அனைத்து சன்னதி தெய்வங்களுக்கும் சிறப்பு அபிஷேகமும் ஆராதனைகளும் செய்யப்பட்டது. தொடர்ந்து, கருமாரியம்மன் கோயிலில் புனரமைப்பு பணிகள் துவங்குவதை முன்னிட்டு பல்வேறு சிறப்பு யாகங்களும் ஹோமங்களும் பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் நடந்தது.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு நிருபர்களிடம் கூறியதாவது: ஒவ்வொரு கோயிலிலும் ஆகம விதிப்படி 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடைபெறவேண்டும். திருவேற்காடு கருமாரியம்மன் கோயிலில் கடந்த 2006ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் 2018ம் ஆண்டு ஆகம முறைப்படி கும்பாபிஷேகம் நடைபெற்றிருக்கவேண்டும். கொரோனா தொற்று பரவல் காரணமாக நடைபெறவில்லை. கோயிலுக்கு சொந்தமான திருமண மண்டபம், பக்தர்கள் தங்கும் விடுதி, கோயில் பிரகாரத்தை அகலப்படுத்துவது, கோயில் மண்டபம், ராஜகோபுரத்தை கருங்கல்லால் புனரமைப்பது என ரூ18 கோடி மதிப்பில் திருப்பணிகள் செய்யப்படுகிறது.

சுமார் 2 ஆண்டுகளில் திருப்பணிகள் நிறைவு பெற்று கருமாரியம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெறும், என்றார். இதில் திருவேற்காடு நகர்மன்ற தலைவர் என்.இ.கே.மூர்த்தி, துணை தலைவர் ஆனந்தி ரமேஷ், கோயில் இணை ஆணையர் லட்சுமணன், துணை ஆணையர் ஜெயப்பிரியா, முன்னாள் அறங்காவலர் லயன் டி.ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: