பாளை ஆயிரத்தம்மன் கோயில் மகா கும்பாபிஷேகம் கோலாகலம்: திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்

நெல்லை: பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் மகா கும்பாபிஷேக விழா வெகுவிமரிசையாக கோலாகலமாக நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பாளையில் பிரசித்தி பெற்ற ஆயிரத்தம்மன் கோயில் அமைந்துள்ளது. குலசை முத்தாரம்மன் கோயில் தசரா பண்டிகைக்கு அடுத்தபடியாக பாளையில் உள்ள ஆயிரத்தம்மன் கோயிலில் தசரா பண்டிகை சிறப்பு வாய்ந்ததாகும். தசரா பண்டிகையின் கடைசி நாளில் 12 அம்மன் சப்பரங்கள் புடைசூழ ஆயிரத்தம்மன் எழுந்தருளி பக்தர்கள் தரிசனம் நடைபெறும்.

இதைத்தொடர்ந்து மாரியம்மன் கோயில் எருமைக்கிடா மைதானத்தில் ஆயிரத்தம்மன் மகிஷா சூரசம்ஹாரம் நடைபெறும். இத்தகைய சிறப்புக்களை உடைய பாளை ஆயிரத்தம்மன் கோயிலில் கும்பாபிஷேகம் நடைபெற வேண்டி திருப்பணிகள் செய்து முடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து கோயிலில் மகா கும்பாபிஷேக விழா கடந்த 22ம் தேதி விக்னேஷ்வர பூஜை, தேவதா அனுக்ஞை, மகா சங்கல்பம், மகா கணபதி பூஜை, மகாலட்சுமி ஹோமம், சுதர்சன ஹோமம், துர்கா ஹோமம், நவக்கிரக ஹோமம், கோ பூஜை, கஜ பூஜை உள்ளிட்ட சிறப்பு வழிபாட்டுடன் துவங்கியது. இதைத்தொடர்ந்து மாலையில் தாமிரபரணி நதியில் இருந்து தீர்த்தம் எடுத்துவரும் வைபவம் நடந்தது. பின்னர் மாலை 6 மணி முதல் யாகசாலை பூஜை, பூர்ணாஹூதி தீபாராதனை நடந்தது.

 தொடர்ந்து 23ம் தேதி 2ம் யாகசாலை பூஜையும், மாலையில் 3ம் யாகசாலை பூஜையும், கும்ப பூஜையும் நடந்தது. தொடர்ந்து இரவு 11 மணிக்கு யந்திர ஸ்தாபனம், அஷ்டபந்தன மருந்துசாத்துதல் நடந்தது. கும்பாபிஷேக தினமான 24ம் தேதி இன்று காலை நான்காம் யாகசாலை பூஜை நடந்தது. தொடர்ந்து அதிகாலை 6 மணிக்கு மேல் 7.15க்குள் விமானம் மற்றும் ஆயிரத்தம்மன், பரிவார தேவதைகளுக்கும் ஜூர்னோத்தாரண அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதையடுத்து காலையில் அம்மனுக்கு மகா அபிஷேகம் சிறப்பு அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். பக்தர்களுக்கு மகா அன்னதானமும் நடந்தது. இதற்கான ஏற்பாடுகளை விழா குழுவினர் செய்திருந்தனர்.

Related Stories: