சிறுமலை அடிவார பகுதியில் கனகாம்பரம் பூக்கள் விளைச்சல் அமோகம்: விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

சின்னாளபட்டி: சின்னாளப்பட்டி அருகே சிறுமலை அடிவாரப் பகுதியில் கனகாம்பரம் பூக்கள் விளைச்சல் அமோகமாக உள்ளது. பூக்கள் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். ஆத்தூர் ஒன்றியம், சின்னாளப்பட்டியை அடுத்த பெருமாள்கோவில்பட்டி, ஜாதிகவுண்டன்பட்டி, அமலிநகர், ரெங்கசாமிபுரம், ஜெ.ஊத்துப்பட்டி,காமலாபுரம், முருகம்பட்டி, நடுப்பட்டி ஆகிய கிராமங்களில் நூற்றுக்கணக்கான ஏக்கர்களில் தற்போது கனகாம்பர பூக்களை பயிரிட்டு இருந்தனர். தற்போது, அவை நன்கு விளைச்சல் அடைந்து செடிகளில் பூக்கள் பூத்து குலுங்குகின்றனர். தினசரி, அதிகாலை நேரங்களிலும், மாலை நேரங்களிலும் கனகாம்பரம் பூக்கள் பறிக்கப்பட்டு லாரிகள் மூலம் சென்னை, கோவை, திருச்சி, கும்பகோணம் ஆகிய ஊர்களுக்கு அனுப்பப்படுகின்றன. தற்போது, பூ மார்க்கெட்டில் கனகாம்பரம் பூ ஒரு கிலோ ரூ.15 முதல் ரூ.200 வரை விற்கப்படுகிறது.

கனகாம்பரம் விவசாயிகள் கூறுகையில், கனகாம்பரம் செடியில் பூக்களை எடுக்க வேண்டுமென்றால் குறைந்தது ஆறு மாதம் காத்திருக்க வேண்டும்.  தொடர்ந்து கனகாம்பரம் செடியை பராமரிப்பு செய்தால் இரண்டு வருட காலத்திற்கு பூக்களை பறிக்கலாம்.ஒரு ஏக்கருக்கு சராசரியாக ஒரு நாள் விட்டு ஒரு நாள் 7 முதல் 10 கிலோ வரை பூக்கள் எடுக்கலாம். தற்போது வெயில் காலமாக இருப்பதால் பூக்கள் நன்கு வளர்ந்து விளைச்சல் அதிகமாக உள்ளது. பூக்களை எடுக்காமல் விட்டால் செடியிலிருந்து உதிர்ந்துவிடும்.

அதனால் நாங்கள் 3 கிலோ பூ எடுக்கும் பெண் தொழிலாளிக்கு ரூ.150 கூலியாக கொடுக்கிறோம். கனகாம்பரம் 1கிலோ ரூ.500க்கு மேல் விற்றால்தான் விவசாயிகளுக்கு நல்ல லாபம் கிடைக்கும் என்றார்.

Related Stories: