இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை: பசுமை வழிச்சாலையில் உள்ள இந்திய குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.இதுகுறித்து அரசு வெளியிட்ட அறிக்கை: தமிழக மாணவர்கள் எங்கு பயிற்சி பெற்று முதல்நிலை தேர்வில் வெற்றி பெற்றிருந்தாலும், இந்த பயிற்சி மையத்தில் பயிற்சி பெற அனுமதிக்கப்படுவார்கள்.  இந்த ஆண்டு 225 பேர் தங்கி பயில சிறப்பான வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வர்கள் இன்று மாலை 6 மணி முதல் 27ம் தேதி மாலை 6 மணி வரையில் www.civilservicecoaching.com என்ற இணையத்தில் தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.இடஒதுக்கீட்டின்படி தெரிவு செய்யப்பட்ட தேர்வர்கள் விவரம் 28ம் தேதி மாலை 6 மணியளவில் இணையத்தில் வெளியிடப்பட்டு, 29ம் தேதி மற்றும் 30ம் தேதி ஆகிய இரு நாட்களில் சேர்க்கை நடைபெறுவதோடு ஜூலை 1ம் தேதி முதல் வகுப்புகள் தொடங்கப்படும்.  

இணையத்தில் பதிவு செய்யும் மாணவர்கள், விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ளபடி, வருமான சான்றிதழ் கேட்டு விண்ணப்பித்தமைக்கான இணைய ரசீதை விண்ணப்பத்துடன் இணைத்தளிக்க வேண்டும். வருமானம் தொடர்பாக உரிய அலுவலர்கள் அளித்த வருமான சான்றிதழை குடிமை பணி தேர்வு பயிற்சி மையத்தில் சேரும் போது ஒப்படைக்கவேண்டும். பொருளாதார ரீதியாக பின்தங்கிய பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பட்டியலின தேர்வர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். அரசு விதிகளுக்குட்பட்டு பதிவு செய்தவர்களில் 225 தேர்வர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு தங்கும் வசதிகளுடன் குடிமைப்பணி முதன்மை தேர்வுக்கு பயிற்சி அளிக்கப்படும்.

Related Stories: