விபத்தில் சேதமடைந்த காருக்கு பணம் கேட்டு ஆம்னி பஸ்சை கடத்திய திருச்சி பாஜ நிர்வாகி கைது

திருச்சி: விபத்தில் சேதமடைந்த காருக்கு பணம் கேட்டு ஆம்னி பஸ்சை கடத்தி சென்ற திருச்சி பாஜ நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.திருச்சி திமுக எம்பி சிவாவின் மகன் சூர்யா. இவர், சமீபத்தில் பாஜவில் இணைந்தார். இதையடுத்து அவர், பாஜ ஓபிசி பிரிவின் மாநில பொதுச்செயலாளராக நியமிக்கப்பட்டார். இந்நிலையில் கடந்த 11ம் தேதி சூர்யா, சென்னையிலிருந்து திருச்சிக்கு தனது காரில் வந்தார். அப்போது உளுந்தூர்பேட்டை அருகே அவரது காரும், தனியார் ஆம்னி பஸ்சும் மோதி விபத்து ஏற்பட்டது. இதில் கார் பலத்த சேதமடைந்தது. இதுதொடர்பாக சூர்யா, கள்ளக்குறிச்சி மாவட்டம் திருநாவளூர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்நிலையில் சூர்யா, சேதமடைந்த காரை சரிசெய்ய சர்வீஸ் சென்டரில் விட்டபோது, அதற்கு ரூ.5 லட்சம் செலவாகும் என தெரிவிக்கப்பட்டது. இதனால் ரூ.5 லட்சத்தை கேட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து சென்னை செல்ல இருந்த, அந்த டிராவல்ஸ் நிறுவனத்தின் மற்றொரு ஆம்னி பஸ்சை அதே பஸ் டிரைவர்களான மகேந்திரன், ஜேம்ஸ் ஆகியோரை மிரட்டி சூர்யா கடத்தி சென்று தனது இடத்தில் நிறுத்தி வைத்துள்ளார். அவர், ரூ.5லட்சத்தை கொடுத்தால் தான் பஸ்சை விடுவேன் என தெரிவித்ததாகவும், தொடர்ந்து பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

இதுதொடர்பாக ஆம்னி பஸ் நிறுவன மேலாளர் முருகானந்தம், திருச்சி கன்டோன்மென்ட் காவல்நிலையத்தில் 19ம் தேதி புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதுகுறித்து போலீசார் 294(B) தகாத வார்த்தைகளால் பேசுதல், 506(1) மிரட்டல் விடுத்தல், 385 அச்சுறுத்தல், 395 வழிப்பறி கொள்ளை ஆகிய 4 பிரிவுகளில் வழக்கு பதிந்து சூர்யாவை நேற்று கைது செய்தனர். தகவல் தெரிந்த பாஜகவினர், சூர்யா கைது கண்டித்து காவல் நிலையம் முன் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து போலீசார் 50 பேரை கைது செய்தனர்.

Related Stories: