புதுகை அருகே தொண்டைமான் மன்னர்-ஆங்கிலேயர் வகுத்த எல்லை கல்வெட்டு கண்டுபிடிப்பு

பொன்னமராவதி: புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா நகரப்பட்டி உடைகுளம் வயலில் ஆங்கிலேயர்-தொண்டைமான் மன்னர் இடையே எல்லை அமைத்தது தொடர்பான கல்வெட்டு கிடைத்துள்ளது. இது செவலூர் ஆரம்பப்பள்ளி தலைமை ஆசிரியர் சரவணன் அளித்த தகவலின்பேரில், புதுக்கோட்டை தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன், தலைவர் ராஜேந்திரன் ஆகியோர் மேற்கொண்ட கள ஆய்வில் கண்டெடுக்கப்பட்டது. இதுகுறித்து தொல்லியல் ஆய்வுக்கழக நிறுவனர் மணிகண்டன் கூறியதாவது:

புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்கள் மற்றும் ஆங்கிலேயர் இடையே இணக்கமான உறவு இருந்தது. இதனால் இந்திய ஆட்சிப்பிரதேசத்தில் புதுக்கோட்டை சமஸ்தானம் செயல்பட ஆங்கிலேய அரசு அனுமதித்திருந்தது. தொண்டைமான் ஆட்சிப்பகுதி எல்லை உள்ளிட்டவற்றை தெளிவாக வகுத்ததன் மூலம் எவ்வித முரண்பாடுகளுக்கும் இடம் கொடுக்காமல் இரு தரப்பு அரசுகளும் செயலாற்றியதை தற்போது கண்டெடுக்கப்பட்டுள்ள கல்வெட்டு வெளிப்படுத்துகிறது.

இந்த கல்வெட்டில் பொறிக்கப்பட்டுள்ள செய்தி குறிப்பின்படி 1822ம் ஆண்டு மதுரை கலெக்டர் மேஸ்தர் சுபிதார் என்பவரின் உத்தரவின்படி திருச்சி மாவட்டம், மருங்காபுரி தாலுகாவை சேர்ந்த கலிங்கப்பட்டி கிராமத்திற்கும், புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர் ஆட்சி பகுதியில் உள்ள கல்லம்பட்டி கிராமத்திற்கும் எல்லை நிர்ணயம் செய்து எல்லை கல் நடப்பட்டதாக தெரிவிக்கிறது. புதுக்கோட்டை தொண்டைமான் மன்னர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் இணக்கமான சூழல் இருந்ததையும் ராஜா விஜய ரகுநாத ராய தொண்டைமான் (1807-1825) ஆட்சி காலத்தின் போது இக்கல்வெட்டு நடப்பட்டுள்ளது என்பதையும் வெளிப்படுத்துகிறது என்றார்.

Related Stories: