பதுங்கி உயிர் தப்பிய குடும்பத்தினர்; காட்டு யானை இடித்து தொழிலாளி வீடு சேதம்: பந்தலூர் அருகே நள்ளிரவு பரபரப்பு

பந்தலூர்: நீலகிரி மாவட்டம் பந்தலூர் அருகே தேவாலா வாளவயல் பகுதி வனத்தையொட்டி உள்ளது. நேற்று இரவு வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை காட்டுயானை வாளவயல் பகுதிக்குள் புகுந்தது. இந்த பகுதியை சேர்ந்தவர் முத்தையா (45). கூலித்தொழிலாளி. இவர் மனைவி, குழந்தைகளுடன் நேற்று இரவு சாப்பிட்டு விட்டு தூங்கச்சென்றார்.

நள்ளிரவு இவரது வீட்டிற்கு வந்த ஒற்றை காட்டுயானை திடீரென வீட்டை துதிக்கையால் இடித்தது. சத்தம் கேட்டு முத்தையா மற்றும் குடும்பத்தினர் எழுந்து பார்த்தபோது வீட்டை காட்டுயானை இடித்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். பின்னர், வீட்டின் ஒரு பகுதியில் பதுங்கினர்.

ஆனால், யானை வீட்டின் சமையல் அறை மற்றும் குளியல் அறையை இடித்து துவம்சம் செய்தது. இதனையடுத்து குடும்பத்தினர் சத்தம் எழுப்பியும், அங்கு கிடந்த தகரத்தை தட்டியும் யானையை விரட்டும் முயற்சியில் இறங்கினர்.

அவர்களுடன் அந்த பகுதி மக்களும் சேர்ந்து சத்தம் எழுப்பினர். சிறிது நேரத்தில் சத்தம் தாங்க முடியாமல் யானை அங்கிருந்து வனத்துக்குள் சென்று மறைந்தது. யானை ஊருக்குள் புகுந்ததால் அச்சம் அடைந்த கிராம மக்கள், இது குறித்து தேவாலா வனத்துறைக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் சம்பவ இடத்துக்கு வந்து சேதங்களை பார்வையிட்டனர்.

Related Stories: