அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் விசாரணைக்கு ஆஜராக மேலும் சில வாரமாகும்: ராகுலை சந்தித்து காங். தலைவர்கள் ஆதரவு

புதுடெல்லி: விசாரணைக்கு நேரில் ஆஜராக மேலும் சில வாரங்கள் அவகாசம் வழங்கக் கோரி அமலாக்கத் துறைக்கு காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இந்நிலையில், டெல்லி காங்கிரஸ் தலைமை அலுவலகத்தில் ராகுலை சந்தித்து காங்கிரஸ் தலைவர்கள், எம்பி.க்கள் ஆதரவு தெரிவித்தனர். நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக  விசாரணைக்கு ஆஜராகும்படி சோனியா, ராகுலுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியது. அதன்படி, கடந்த 13, 14, 15, 20 மற்றும் 21ம் தேதிகளில் டெல்லி அமலாக்கத் துறை  அலுவலகத்தில் ராகுல் காந்தி விசாரணைக்கு ஆஜரானார். அவரிடம் அமலாக்கத் துறை அதிகாரிகள் இதுவரை மொத்தம் 50 மணி நேரம் விசாரணை நடத்தி உள்ளனர்.

அதே நேரம், இந்த விசாரணை பழிவாங்கும் நடவடிக்கை என எதிர்ப்பு தெரிவித்து டெல்லியில் ராகுலிடம் விசாரணை நடந்த அனைத்து நாட்களிலும் காங்கிரஸ் தலைவர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் தொடர் போராட்டம் நடத்தினர். தேசிய அளவிலும் சத்தியாகிரகமப் போராட்டம், ஆளுநர் மாளிகை முற்றுகை போன்ற போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதற்கிடையே, கொரோனா தொற்று காரணமாக சோனியா காந்தி மட்டும் அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்து வருகிறார். கடந்த 12ம் தேதி டெல்லி கங்கா ராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இருதினங்களுக்கு முன் வீடு திரும்பினார்.

இதைத் தொடர்ந்து, அமலாக்கத் துறை ஏற்கனவே சம்மனை ஏற்று சோனியா காந்தி இன்று விசாரணைக்கு ஆஜராவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், விசாரணைக்கு ஆஜராவதை மேலும் சில வாரங்களுக்கு ஒத்திவைக்கும்படி  அமலாக்கத் துறைக்கு சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார். இத்தகவலை காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ் தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ளார். இது குறித்த அவர் வெளியிட்டுள்ள டிவிட்டர் பதிவில், `கொரோனா, நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டதால் வீட்டில் ஓய்வெடுக்க வேண்டும் என்று சோனியா காந்திக்கு மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளனர். எனவே, முழுமையாக குணம் அடையும் வரையில் மேலும் சில வாரங்களுக்கு விசாரணையை ஒத்திவைக்கும்படி அமலாக்கத் துறைக்கு சோனியா கடிதம் எழுதியுள்ளார்,’ என்று கூறியுள்ளார்.

இதனிடையே, சோனியா காந்தி, ராகுல் காந்தி மீதான அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தும் நாடு முழுவதிலும் இருந்து காங்கிரஸ் மூத்த  தலைவர்கள், நிர்வாகிகள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள் டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைமை அலுவலகத்துக்கு முன்பாக 6வது நாளாக நேற்றும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ராஜஸ்தான் முதல்வரும், மூத்த தலைவருமான அசோக் கெலாட், ஜெய்ராம் ரமேஷ், சட்டீஸ்கர் முதல்வர் பூபேஷ் பாகல் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ராகுல் காந்தியும், பிரியங்கா காந்தியும் கட்சி அலுவலகத்துக்கு வந்து மூத்த தலைவர்களை சந்தித்தனர்.

* அக்னிபாதை திட்டத்தை திரும்ப பெற வேண்டும்

டெல்லி தலைமை அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவர்கள், எம்பி.க்கள், எம்எல்ஏ.க்கள், தொண்டர்கள் முன்னிலையில் பேசிய ராகுல் காந்தி, ``பிரதமர் மோடி நாட்டை 3 தொழிலதிபர்களிடம் அடகு வைத்து விட்டார். ராணுவத்தில் ஒரே பதவி, ஒரே ஓய்வூதியம் குறித்து பேசி வந்த பாஜ, தற்போது பதவியும் இல்லை, ஓய்வூதியமும் இல்லை என்கிறது. சீன ராணுவம் நமது எல்லையை முற்றுகையிட்டுள்ளது. ராணுவத்தை வலுப்படுத்த வேண்டிய சூழலில், பாஜ அதனை வலுவிலக்க செய்து விட்டு, தங்களை தேசியவாதிகள் என்று கூறிகொள்கிறது,’ என்று கூறியுள்ளார்.

Related Stories: