ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 7 ஆக சரிவு... எடப்பாடிக்கு 68 பேர் ஆதரவு!!

சென்னை: அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 7 ஆக சரிந்துள்ளது.அதிமுக செயற்குழு, பொதுக்குழு கூட்டம் சென்னையில் ஜூன் 23ந்தேதி (நாளை) நடைபெற உள்ளது. அந்த கூட்டத்தில் என்னென்ன தீர்மானங்கள் கொண்டு வருவது என்பது பற்றி ஆலோசனை நடத்துவதற்காக கடந்த 14ம் தேதி சென்னையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடத்தப்பட்டது. அந்த கூட்டத்தில் அதிமுகவுக்கு இரட்டை தலைமைக்கு பதில் ஒற்றை தலைமை கொண்டு வர வேண்டும் என்று கோரிக்கை எழுந்தது.

இதற்கு ஓ.பன்னீர்செல்வமும், அவரது ஆதரவாளர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் அதிமுகவில் மிகப்பெரிய பூகம்பம் வெடித்து உள்ளது. ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓ.பன்னீர்செல்வத்தை சமரசம் செய்ய எடப்பாடி தரப்பினர் மேற்கொண்ட முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது. இரட்டை தலைமையில் உறுதியாக இருக்கும் ஓ.பன்னீர்செல்வம் தனக்கு எதிராக பொதுக்குழு கூட்டத்தில் ஒற்றைத் தலைமை தீர்மானம் கொண்டு வரப்படலாம் என்று கருதுகிறார். எனவே 23ம் தேதி (நாளை) நடத்த திட்டமிட்டுள்ள அதிமுக பொதுக்குழு கூட்டத்தை ஓ பன்னீர் செல்வம் புறக்கணிக்க திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், பொதுக்குழு கூட்டத்தையே முடக்கும் முயற்சியிலும் அவர் ஈடுபட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த சூழலில், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர் செல்வம் ஆதரவு மாவட்ட செயலாளர்களின் எண்ணிக்கை 12ல் இருந்து 7 ஆக சரிந்துள்ளது. அதிமுகவில் நிர்வாகரீதியான 75 மாவட்டங்களில் பெரும்பான்மை, அதாவது 68 மாவட்டச் செயலாளர்கள் தங்கள் ஆதரவை எடப்பாடி பழனிசாமிக்கு தெரிவித்துள்ளனர். நேற்று ஒரே நாளில் பன்னீர் செல்வத்திடம் இருந்த 5 மாவட்ட செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமி பக்கம் தாவியுள்ளனர்.பன்னீர் செல்வத்திற்கு மாவட்ட செயலாளர்கள் தேனி சையதுகான், வேளச்சேரி அசோக், குமரி அசோகன், திருச்சி வெல்லமண்டி நடராஜன், வைத்திலிங்கம், தஞ்சை சுப்ரமணி மட்டுமே ஆதரவாக உள்ளனர்.இதுதவிர, மொத்தம் உள்ள 2,500 பொதுக்குழு உறுப்பினர்களில் 2,300-க்கும் மேற்பட்டோர் இபிஎஸ்ஸுக்கு ஆதரவாக, பொதுக்குழுவை குறிப்பிட்ட தேதியில் நடத்தி முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி கடிதம் அனுப்பியுள்ளனர்.

Related Stories: