ஒகேனக்கல் பரிசல் துறையில் தீ 1800 லைப் ஜாக்கெட்டுகள் பரிசல்கள் எரிந்து நாசம்

தர்மபுரி: ஒகேனக்கல் பரிசல் துறையில் ஏற்பட்ட தீ விபத்தால் 1800 லைப் ஜாக்கெட்டுகள், பரிசல்கள் எரிந்து நாசமானது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்யும் காலங்களில் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிக்கும். நீர்வரத்து அதிகரிக்கும் காலங்களில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதிப்பது வழக்கம். இந்நிலையில் கடந்த 18ம் தேதி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து 15 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது. இதனால் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் கலெக்டர் சாந்தி தடை விதித்திருந்தார்.

இந்நிலையில், நேற்று நீர்வரத்து 8,500 கனஅடியாக குறைந்ததால், அருவியில் குளிக்கவும் பரிசல் இயக்கவும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்கியது. இந்நிலையில், அடிக்கடி பரிசல் இயக்க தடை விதிப்பதை கண்டித்து, பரிசல் ஓட்டிகள் நேற்று பரிசல்களை இயக்காமல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ஒகேனக்கல் கோத்திக்கல் பரிசல்துறையில், பரிசல்கள், சுற்றுலா பயணிகள் அணிந்து செல்லும் லைப் ஜாக்கெட்டுகள் வைக்கப்பட்டிருந்தது.

இரவு 8 மணியளவில், பரிசல் துறையில் தீ பிடித்தது. இதில், 1800 லைப் ஜாக்கெட்டுகள், 10 பரிசல்கள், 2 டூவீலர்கள் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து தகவல் அறிந்த ஒகேனக்கல் தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைத்தனர். இந்த தீ விபத்து குறித்து ஒகேனக்கல் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: