அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெறக்கோரி சாஸ்திரிபவன், சென்ட்ரல் ரயில் நிலையம் முற்றுகை: போலீசாருடன் தள்ளுமுள்ளு; மாணவர் அமைப்பினர் கைது

சென்னை: அக்னி பாதை திட்டத்தை ஒன்றிய அரசு திரும்ப பெறக் கோரி சாஸ்திரிபவன் அருகே தடுப்புகளை மீறி இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் முற்றுகையிட முயன்றதால் போலீசாரிடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதேபோல் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினரை போலீசார் கைது செய்தனர். இந்திய ராணுவத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றும் வகையில் கடந்த வாரம் அக்னி பாதை திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் தன்னெழுச்சியாக மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் போராட்டத்தில் குதித்துள்ளதால் வடமாநிலங்களில் பல இடங்களில் தென் மாநிலங்களில் இருந்து செல்லும் பல எக்ஸ்பிரஸ் ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மேலும், ரயில் நிலையங்களுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னையிலும் கடந்த 3 நாட்களாக போராட்டம் வெடித்துள்ளது. இதனால் சென்ட்ரல், எழும்பூர் ரயில் நிலையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. நேற்று சென்னை நேப்பியர் பாலம் முதல் போர் நினைவு சின்னம் வரை போக்குவரத்து தடை செய்யப்பட்டு பாதுகாப்பு வழங்கப்பட்டது. இந்நிலையில் சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒன்றிய அரசு அலுவலகமான சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த முற்றுகை போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்க வில்லை. இருந்தாலும், திட்டமிட்டபடி நேற்று காலை 12 மணி அளவில் சாஸ்திரிபவன் முற்றுகை போராட்டம் நடந்தது.

இதில் 40க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். அனைவரும் சாஸ்திரிபவன் அருகே ஒன்று கூடி பேரணியாக முற்றுகை போராட்டம் நடத்த முயன்றனர். ஆனால் போலீசார் தடுப்புகள் அமைத்து அனைவரையும் தடுத்தனர். போராட்டக்காரர்கள் போலீசாரின் தடுப்புகள் மீது ஏறி சாஸ்திரிபவன் நோக்கி செல்ல முயன்றனர். போலீசார் அவர்கள் அனைவரையும் குண்டுக்கட்டாக தூக்கி சென்று பேருந்துகளில் ஏற்றினர். இதனால் போலீசாருக்கும் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினருக்கும் இடையே கடும் வாக்குவாதம் மற்றும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. பிறகு அனைவரையும் வலுக்கட்டாயமாக தூக்கி சென்று கைது செய்தனர். இந்த சம்பவத்தால் சிறிது நுங்கம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

இதேபோல், சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே மாணவர்கள் அமைப்புகள் சார்பில் முற்றுகை போராட்டம் நடந்தது. இந்த போராட்டத்தின் போது 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் ஒன்றிய அரசுக்கு எதிராகவும், அக்னி பாதை திட்டத்தை திரும்ப பெற கோரி பதாகைகளை ஏந்தி பேரணியாக சென்ட்ரல் ரயில் நிலையம் நோக்கி வந்தனர். அவர்கள் அனைவரையும் போலீசார் பாதி வழியிலேயே தடுத்து நிறுத்தி கைது செய்து பேருந்துகளில் ஏற்றினர். இந்த சம்பவத்தால் சிறிது நேரம் சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: