செஸ் ஒலிம்பியாட் வீரர்களுக்கு ரூ.2 லட்சம் காப்பீடு: அமைச்சர் மெய்யநாதன் தகவல்

சென்னை: செஸ் ஒலிம்பியாட் போட்டியில் பங்கேற்கும்  வீரர்களுக்கு 15 நாட்களுக்கான ரூ.2 லட்சம் காப்பீடு வசதி செய்து தரப்பட உள்ளதாக அமைச்சர் மெய்யநாதன் தெரிவித்துள்ளார். மாமல்லபுரத்தில் வருகிற ஜூலை 28 முதல் ஆகஸ்ட் 10ம் தேதி வரை நடைபெற உள்ள 44 வது செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கான முன்னேற்பாடு பணிகளை சுற்றுச்சூழல், காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன்  நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.

அப்போது, அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: முதல்வரின் நடவடிக்கையால், 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி ஒலிம்பிக் சுடரை பிரதமர் 19ம் தேதி டெல்லியில் ஏற்றி வைத்துள்ளார். இந்த ஒலிம்பிக் சுடர் 75 முக்கிய நகரங்களுக்கு எடுத்துச் செல்லப்பட்டு ஜூலை 28ம் தேதி தமிழக முதல்வரிடம் போட்டி நடைபெறுகிற விளையாட்டு அரங்கத்தில் வழங்கப்படவுள்ளது. இதில் விளையாட்டு வீரர்களுக்காக 500 செஸ் போர்டுகள் அமைக்கப்படவுள்ளது. இப்போட்டி நடைபெறுவதையொட்டி பொதுப்பணித்துறை மூலம் சாலைகள் மேம்படுத்தப்படுகிறது. இப்போட்டியில் 187 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்கவுள்ளனர். போட்டியில் இந்தியாவிலிருந்து 4 அணிகள், பிற நாடுகளிலிருந்து 227 அணிகள் பங்கேற்கவுள்ளன. வீரர்களின் நலன் கருதி சுகாதாரமான உயர்தர நட்சத்திர ஓட்டல்களில் தங்கும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கொரோனா பரிசோதனை மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மருத்துவத்துறை மூலம் மேற்கொள்ளப்படும். முதல்வர் இப்போட்டியில் பங்கேற்கும் வீரர்களுக்கு 15 நாட்களுக்கான ரூ.2 லட்சம் காப்பீடு வசதி செய்ய  நடவடிக்கை எடுத்துள்ளார் என்றார்.

Related Stories: