அக்னிபாதை திட்டத்திற்கு எதிரான போராட்டம் எதிரொலி ரயில் நிலையங்களில் பிளாட்பாரம் டிக்கெட் விநியோகம் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

சென்னை: சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும் பிளாட்பாரம் டிக்கெட் விநியோகம் தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே  அறிவித்துள்ளது. முப்படைகளில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் பணிபுரியக் கூடிய அக்னிபாதை  திட்டத்தை ஒன்றிய அரசு அறிவித்துள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து நாடெங்கும் இளைஞர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னையில் சனிக்கிழமை போராட்டம் நடந்த நிலையில் பாதுகாப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. சென்னை தலைமை செயலகத்தை நோக்கி செல்லும் சாலைகளில் அவசர தேவைகளை தவிர்த்து பொது போக்குவரத்து நிறுத்தப்பட்டது.

சென்னை சென்ட்ரல் மற்றும் எழும்பூர் ரயில் நிலையங்களில் ரயில்வே போலீசார் 2 அடுக்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் சென்னையில் முக்கிய பகுதிகளில் ஆங்காங்கே தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் கண்காணித்து வருகிறனர். இந்நிலையில், நாடு தழுவிய வேலை நிறுத்தத்திற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதை கருத்தில் கொண்டு, ரயில் பயணிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த, தெற்கு ரயில்வேயின் சென்னை கோட்டத்தில் இருக்கும் அனைத்து ரயில் நிலையங்களிலும், அடுத்த அறிவிப்பு வரும்வரை நடைமேடை டிக்கெட்டுகள் வழங்குவதை உடனடியாக நிறுத்தியுள்ளது.

இது குறித்து தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கை: நாடு முழுவதும் அக்னிபாதை திட்டத்துக்கு எதிராக தொடர்ந்து பல இடங்களில்  போராட்டங்கள் நடந்து வருகின்றன. இதன் காரணமாக, தெற்கு ரயில்வேயில் பயணிகளின் பாதுகாப்பு கருதி சென்னை மண்டலத்துக்குட்பட்ட ரயில் நிலையங்கள் அனைத்திலும் பிளாட்பாரம் டிக்கெட்டுகள் வழங்கப்படுவது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. இது குறித்து அடுத்த அறிவிப்புகள் வரும் வரை இந்தநிலை தொடரும். அதேபோல் ரயில் பயனாளர்கள் மற்றும் ரயில்வே சொத்துகளின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் மற்றும் பயணிகள் ரயில்வே நிர்வாகத்துக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: