சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்க வேண்டும்: இந்து அறநிலையத்துறை ஆபீசில் 4 ஆயிரம் பேர் மனு

கடலூர்: சிதம்பரம் நடராஜர் கோயிலை அரசு ஏற்கவேண்டும் என்று கோரி சுமார் 4 ஆயிரம் பேர் தங்களது கருத்தை இந்துசமய அறநிலையத்துறை அலுவலகத்தில் நேற்று மனுவாக பதிவு செய்துள்ளனர். கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் உலக பிரசித்தி பெற்ற நடராஜர் கோயில் உள்ளது. பொதுதீட்சிதர்கள் நிர்வாகத்தின் கீழ் செயல்பட்டு வரும் இந்த கோயிலில் அறநிலையத்துறை உத்தரவின்பேரில் கண்காணிப்பு குழுவினர் ஆய்வு செய்தனர். இதற்கு கோயில் பொது தீட்சிதர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதிகாரிகளின் ஆய்வுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்கவில்லை. இந்நிலையில் சிதம்பரம் நடராஜர் கோயில் குறித்து ஆணையரால் அமைக்கப்பட்ட விசாரணை குழுவிடம், கோயில் நலனில் அக்கறை உள்ளவர்கள் தங்களது கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகளை 20, 21ம் தேதிகளில் (நேற்றும் இன்றும்) கடலூர் புதுப்பாளையம் இந்து சமய அறநிலை துறை அலுவலகத்தில் தெரிவிக்கலாம். மின்அஞ்சல் முகவரியிலும் அனுப்பலாம் என அறிக்கை வெளியிடப்பட்டது.

அதன்படி, இந்து சமய அறநிலையத்துறையைச் சேர்ந்த மாவட்ட வருவாய் அலுவலர் சுகுமார், வேலூர் இணை ஆணையர் லட்சுமணன், திருநெல்வேலி மண்டல தணிக்கை அலுவலர் ராஜேந்திரன், விசாரணைக்குழு ஒருங்கிணைப்பாளர் ஜோதி, கடலூர் இணை ஆணையர் அசோக்குமார் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவினர் கடலூர் புதுப்பாளையத்தில் உள்ள இணை ஆணையர் அலுவலகத்தில் நேற்று மனுக்களை நேரடியாகவும், மின்னஞ்சல் மூலமாகவும் பெற்றனர். இதில் பல்வேறு அமைப்பினர் நேரடியாக வந்து மனு அளித்தனர். முதல்நாளான நேற்று நேரடியாக 640 பேர் உட்பட மொத்தம் 4 ஆயிரம் பேர் தங்களது கருத்தை மனுவாக பதிவு செய்துள்ளனர். அதில் பெரும்பாலும் கோயில் நிர்வாகத்தை அரசு கையகப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். தீட்சிதர்கள் மீது வழக்கு: இதனிடையே சிதம்பரத்தில் 17 வயது சிறுமிக்கு திருமணம் செய்தது சம்பந்தமாக நடராஜர் கோயில் தீட்சிதர்கள் 3 பேர் மீது இரு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

Related Stories: