ஓசூரில் மழை நீருடன் கலந்து சாலையில் ஓடும் ரசாயன கழிவு-வாகன ஓட்டிகள் அவதி

ஓசூர் : கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. இதனால் ஏரி, குளங்கள் உள்ளிட்ட நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன. ஓசூர் பகுதியில் பெய்த மழையால் மாநகராட்சிக்கு உட்பட்ட மூக்கண்டப்பள்ளி ஏரி நிரம்பி, உபரிநீர் கால்வாய் மூலம் பேடரப்பள்ளி ஏரிக்கு செல்கிறது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு காமராஜர் நகர் மற்றும் சாந்தபுரம் ஆகிய பகுதிகளில் சாலைகளில் 2 அடி அளவுக்கு மழைநீர் பெருக்கெடுத்து ஓடியதால் வாகன ஓட்டிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். இந்நிலையில் மூக்கண்டப்பள்ளி ஏரி, பேடர்பள்ளி ஏரியை சுற்றியுள்ள பகுதிகளில் பல தனியார் தொழிற்சாலைகள் இயங்கி வருகின்றன.

மழை பெய்யும் நேரத்தில், தனியார் தொழிற்சாலைகள் ரசாயன கழிவுகளை மழை நீரோடு சேர்த்து திறந்து விடுவதால், ஏரி நீர் மாசுபடுவது மட்டுமின்றி கால்நடைகள், பொதுமக்கள் பயன்படுத்துவதால், பல்வேறு நோய்களுக்கு ஆளாகின்றனர். அதேபோன்று நேற்று முன்தினம் இரவும், மழை நீருடன் ரசாயன கழிவுவை தொழிற்சாலைகள் திறந்துவிட்டதால், தோப்பம்மா கோயில் அருகில் சாலையில் நுரை பொங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமம் அடைந்தனர். இதை தடுக்க, மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: