ஹெல்த் மிக்ஸ் பற்றி பேசிய பாஜ தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும்: பால்வளத்துறை அமைச்சர் நாசர் பேட்டி

கோவை: ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக பேசிய பாஜ மாநில தலைவர் அண்ணாமலை மீது வழக்கு தொடரப்படும் என பால் வளத்துறை அமைச்சர் நாசர் தெரிவித்தார். கோவை ஆர்.எஸ்.புரத்தில் உள்ள ஆவின் பாலகத்தில் உயர் தொழில்நுட்ப ஆவின் பாலகத்தை பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் நேற்று திறந்து வைத்தார். பின்னர் அவர் அளித்த பேட்டி: கடந்த 10 ஆண்டுகளாக மூழ்கிப்போன ஆவினை மீட்க திட்டமிட்டு வருகிறோம். உற்பத்தியை அதிகரிக்க தமிழகம் முழுவதும் ஆவின் விற்பனை நிலையங்களை துவங்கி வருகிறோம். கடந்த ஆட்சியின் போது ஆவினில் காலிப்பணியிடங்களை நிரப்ப முறைகேடு நடந்தது. திமுக ஆட்சிக்கு வந்தவுடன் அந்த பணியிடங்கள் நிறுத்தப்பட்டு விட்டது. அதனை முறைப்படுத்தி காலிப்பணியிடங்கள் நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ஆவின் பாலகத்தில் சிக்கன் உள்ளிட்ட பொருட்கள் விற்பனை செய்ய கூடாது. இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்ட மூன்று கடைகளின் உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளது. பாஜ மாநில தலைவர் அண்ணாமலை ஹெல்த் மிக்ஸ் தொடர்பாக தெரிவித்த கருத்து தவறானது. அவர் தன்னை முன்னிலைப்படுத்தி ``நானும் ரவுடிதான், நானும் ரவுடிதான்’’ என்று வடிவேலு பாணியில் கூறி வருகிறார். ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் தயாரிப்பதற்கான சாத்தியம் குறித்து பணிகள் நடைபெற்று வருகிறது. ஆய்வு முடிவுக்கு பிறகு தான் ஹெல்த் மிக்ஸ் பொருட்கள் விற்பனைக்கு கொண்டு வரப்படும். அதற்குள், சுகாதாரத்துறை அமைச்சர் ரூ.77 கோடிக்கு வாங்கியதாக குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அண்ணாமலை மீது நிச்சயமாக வழக்கு தொடரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: