திடக்கழிவு மேலாண்மை துறை மூலம் தயாரித்த 367.30 மெட்ரிக் டன் உரமூட்டைகள் விற்பனை இணையத்திற்கு சப்ளை: மாநகராட்சி தகவல்

சென்னை: சென்னை மாநகராட்சி திடக்கழிவு மேலாண்மை துறை மூலம் இதுவரை தயாரிக்கப்பட்ட 367.30 மெட்ரிக் டன் உரமூட்டைகள் தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை மாநகராட்சி வெளியிட்ட அறிக்கை: சென்னை மாநகராட்சி மாதவரம் சின்ன சேக்காடு பகுதியில் அமைந்துள்ள காற்றுப்புகும் வகையிலான மக்கும் குப்பை பதனிடும் நிலையத்தில் (Windrow Compost Yard) நாள்தோறும் மண்டலங்களிலிருந்து சேகரிக்கப்படும் சுமார் 100 மெட்ரிக் டன் அளவிலான காய்கறி மற்றும் பழ கழிவுகளை கொண்டு இயற்கை உரம் தயார் செய்யப்பட்டு வருகிறது. மண்டலங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு வரும் காய்கறி மற்றும் பழ கழிவுகள் இயந்திரம் மூலம் சிறு துண்டுகளாக வெட்டப்பட்டு திறந்த வெளியில் கழிவுகளை காயவைத்து பின்னர் சலித்து உரமாக மாற்றுகின்றனர்.

இவ்வாறு தயாரிக்கப்படும் இயற்கை உரம் 50 கிலோ மூட்டையாக தமிழ்நாடு கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு விவசாய பணிகளுக்காக அனுப்பி வைக்கப்படுகிறது. நேற்று 30 மெட்ரிக் டன் அளவிலான இயற்கை உரம் தமிழ்நாடு கூட்டுறவு இணையத்திற்கு லாரி மூலம் அனுப்பப்பட்டுள்ளது. இதுவரையில் மொத்தம் 367.30 மெட்ரிக் டன் உரமூட்டைகள் கூட்டுறவு விற்பனை இணையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது. சென்னை மாநகராட்சியில் தினமும் 5 ஆயிரம் டன்னுக்கு மேல் குப்பைகள் சேகரிக்கப்படுகின்றன. அவை கொடுங்கையூர், பெருங்குடி குப்பை கொட்டும் வளாகங்களில் கொட்டப்பட்டு மலை போல் தேங்கின. இந்நிலையில் குப்பைகளை வகை பிரித்து, முடிந்தவரை மறுசுழற்சி செய்யவும் ஈர குப்பைகளில் இருந்து இயற்கை உரம் தயாரிக்கவும் மத்திய அரசு அறிவுறுத்தியது. அதனைத் தொடர்ந்து மாநகராட்சி சார்பில் இயற்கை உரம் தயாரிக்கப்பட்டு, பொதுமக்களுக்கு விற்கப்பட்டு வருகின்றன. இவ்வாறு நேற்றும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் விற்பனை நடந்தது.

Related Stories: