கோவில்பட்டி அருகே கோழித்தீவன ஆலையில் பயங்கர ‘தீ’ விபத்து: ரூ.1.5 கோடி கருவாடு, பொருட்கள் எரிந்து சேதம்

கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே கோழித்தீவன ஆலையில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1.5 கோடி மதிப்பிலான கருவாடுகள், தளவாட பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. தீயணைப்பு வீரர்கள் 10 மணி நேரம் போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பங்களா தெருவை சேர்ந்தவர் அந்தோனி அரசாங்க மணி(47). இவர், கோவில்பட்டியை அடுத்த சிவந்திபட்டியில் கோழித்தீவனம் தயாரிக்கும் ஆலை நடத்தி வருகிறார்.

இதற்காக தூத்துக்குடி, வேம்பார், கன்னியாகுமரி, சென்னை உள்ளிட்ட தமிழகம் முழுவதும் கடலோர கிராமங்களில் இருந்து மொத்தமாக கருவாடுகளை வாங்கி வந்து அதனை உலர வைத்து மிஷினில் பொடியாக அரைத்து வெளிமாநிலங்களுக்கு கோழித்தீவனமாக அனுப்பி வருகின்றனர். ஆலையில் உள்ள 2 குடோன்களில் ரூ.1.5 கோடி காய்ந்த கருவாடுகளும், அதை அரைத்து பொடியாகவும் வைத்திருந்தனர். இந்நிலையில் நேற்று அதிகாலை 5 மணியளவில் ஆலையில் திடீரென தீப்பிடித்தது.

அப்போது காற்று பலமாக வீசியதால் தீ மளமளவென அனைத்து அறைகளுக்கும் பரவியது. தீ ஜூவாலையாக கொளுந்துவிட்டு எரிவதை பார்த்த காவலாளி ராமச்சந்திரன், ஆலை உரிமையாளர் அந்தோனி அரசாங்க மணிக்கு தகவல் தெரிவித்தார். அவர், கோவில்பட்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தார். நிலைய அலுவலர் சுந்தரராஜ் தலைமையில் 2 வண்டிகளில் வீரர்கள் வந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனாலும் தீ கட்டுக்கடங்காமல் பரவவே, கழுகுமலை, விளாத்திகுளம், தூத்துக்குடி ஆகிய  தீயணைப்பு நிலையங்களில் இருந்து நிலைய அலுவலர்கள் மலையாண்டி, சுப்பிரமணியன், மற்றொரு சுப்பிரமணியன் மற்றும் வீரர்கள் தூத்துக்குடி தீயணைப்பு உதவி மாவட்ட அலுவலர் முத்துப்பாண்டி தலைமையில் சென்று தீயை அணைக்கும் பணியில் தீவிரமாக ஈடுபட்டனர்.

சுமார் 10 மணி நேர போராட்டத்திற்கு பின்னர் ‘தீ’ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு முற்றிலும் அணைக்கப்பட்டது.

இந்த விபத்தில் குடோன்களில் மூடைகளில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கருவாடுகள், தயாரித்து வைக்கப்பட்டிருந்த கோழித்தீவனம் மற்றும் தளவாட பொருட்கள் உள்ளிட்ட ரூ.1.5 கோடி பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. இதுகுறித்து உரிமையாளர் கொடுத்த புகாரின்பேரில் கொப்பம்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர். மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories: