செகந்திராபாத்தில் கலவரத்தை தூண்டி விட்ட பயிற்சி மையம்: அகாடமி இயக்குனர் அதிரடி கைது

திருமலை: செகந்திரபாத் ரயில் நிலைய கலவரத்தின் பின்னணியில் தனியார் ராணுவ பயிற்சி மையம் செயல்பட்டது அம்பலமாகி உள்ளது. ஒன்றிய அரசின் ‘அக்னிபாதை’ திட்டத்தை எதிர்த்து தெலங்கானா மாநிலம், செகந்திராபாத் ரயில் நிலையத்தில் நேற்று முன்தினம் போராட்டம் நடந்தது. இதில், 2 ரயில் பெட்டிகளுக்கு தீ வைக்கப்பட்டது. வன்முறையில் தாமோதர் ராகேஷ் (18) என்ற வாலிபர் உயிரிழந்தார்.இந்த சம்பவம் குறித்து குண்டூர் போலீசார் விசாரித்தபோது, இந்த கலவரத்தின் பின்னணியில் தனியார் ராணுவ பயிற்சி மையம்  இருப்பதாக தெரிந்தது.

இது தொடர்பாக செல்போனில் நடந்த உரையாடலின் ஆடியோவும் கிடைத்துள்ளது. இதையடுத்து, ஆந்திர மாநிலம், குண்டூர் மாவட்டம், நரசராவ்பேட்டையை சேர்ந்த ராணுவ பயிற்சி மையத்தின் இயக்குனரான முன்னாள் ராணுவ வீரர் சுப்பாராவை போலீசார்  கைது செய்துள்ளனர். இவர் ராணுவத்தில் சேர விரும்பும் இளைஞர்களுக்கு பயிற்சி அளித்து வருகிறார். கம்மம், நரசராவ்பேட்டை மற்றும் ஐதராபாத்தில் ‘சாய் டிபென்ஸ் அகாடமி’ என்ற பெயரில் பயிற்சி மையம் நடத்தி வருகிறார்.

தன்னிடம் பயிற்சி பெறும் இளைஞர்களை நாடு முழுவதும் நடைபெறும் ராணுவ ஆட்சேர்ப்பு முகாமிற்கு அழைத்துச் செல்வார். செகந்திராபாத் ரயில் நிலைய  போராட்டத்தில் இவர்களை சுப்பாராவ் தூண்டி விட்டு கலவரத்தில் ஈடுபட வைத்துள்ளார். கலவரத்தில் ஈடுபட்டவர்களுக்கு இவரின் பயிற்சி மையங்கள் மூலம் தண்ணீர், மோர், சாப்பாடு வழங்கப்பட்டுள்ளது. கலவரத்துக்கு முந்தைய நாள், குண்டூரில் இருந்து இவரின் பயிற்சி மையத்தில் இருந்து 450 பேர் ஐதராபாத் வந்துள்ளனர். இவர்கள் கலவரத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்களில் 52  பேரை போலீசார் கைது செய்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.

* ராஜஸ்தான் அரசு தீர்மானம்

அக்னிபாதை திட்டத்தை திரும்பப் பெறக் கோரி ராஜஸ்தான் அரசு தீர்மானம் நிறைவேற்றி உள்ளது. அம்மாநில காங்கிரஸ் முதல்வர் அசோக் கெலாட் வீட்டில் நேற்று அமைச்சரவை குழு ஆலோசனை நடத்தி இத்தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டுள்ளது.

* பாஜ எம்எல்ஏக்களுக்கு ‘ஒய்’ பிரிவு பாதுகாப்பு

பீகாரில் துணை முதல்வர் ரேணு தேவி, பாஜ மாநில தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் உள்ளிட்டோர் வீடுகளை அக்னிபாதை போராட்டக்காரர்கள் தாக்கி சூறையாடினர். பாஜ எம்எல்ஏக்கள் பலர் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடந்துள்ளன. இதனால் அவர்களுக்கு சிஆர்பிஎப் படையினர் பாதுகாப்பு வழங்க ஒன்றிய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. துணை முதல்வர் ரேணு தேவி மற்றும் சில எம்எல்ஏக்களுக்கு ஒய் பிரிவு பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

Related Stories: