சர்வதேச யோகா தினத்தையொட்டி 21ம்தேதி 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி: ஒன்றிய அமைச்சர் முருகன் தகவல்

கன்னியாகுமரி : சர்வதேச யோகா தினத்தையொட்டி 21ம் தேதி 75 ஆயிரம் இடங்களில் யோகா பயிற்சி நடக்கிறது என ஒன்றிய அமைச்சர் முருகன் தெரிவித்தார். வரும் 21ம் தேதி சர்வதேச யோகா தினம் கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழக அரசும், ஒன்றிய அரசும் இணைந்து கன்னியாகுமரி விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள கடற்கரையில் யோகா பயிற்சியை நேற்று நடத்தியது. நிகழ்ச்சியில். ஒன்றிய அமைச்சர் எல்.முருகன் தலைமை வகித்தார்.

கலெக்டர் அரவிந்த் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் தமிழக அரசின் கூடுதல் தலைமை செயலாளர் ஜவஹர் மற்றும் மாணவ-மாணவிகள், இளைஞர்கள், பொதுமக்கள் உள்பட 500க்கும் மேற்பட்டோர்  கலந்து கொண்டு யோகா செய்தனர்.

நிகழ்ச்சியில் ஒன்றிய அமைச்சர் எல். முருகன் பேசியதாவது: பிரதமராக மோடி பொறுப்பேற்ற பின்பு யோகா சர்வதேச அளவில் அங்கீகாரம் பெற்று, ஒவ்வொரு ஆண்டும் ஜூன் 21ம்தேதி சர்வதேச யோகா தினமாக கொண்டாடப்பட்டு வருகிறது. மத்திய அரசு கடந்த 8 ஆண்டாக யோகா தினத்தை கொண்டாடி வருகிறது. 75வது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஒன்றிய கால்நடைத்துறை, மீன்வளத்துறை சார்பில் இந்த யோகா பயிற்சி நடக்கிறது.

இந்தியாவில் இன்று குஜராத், உத்ரகாண்ட், கன்னியாகுமரியில் இந்த நிகழ்ச்சி நடக்கிறது. நமது நாட்டில் உருவானதுதான் யோகா. யோகா செய்வதன் மூலம் மன அமைதி ஏற்படுகிறது. மன அழுத்தம், நோய்கள் குறைகிறது. தினமும் 1 மணி நேரம் யோகா, உடற்பயிற்சி செய்வதன் மூலம் உடல் புத்துணர்வு பெறுகிறது. ஜூன் 21ம் தேதி சர்வதேச யோகா தினத்தை முன்னிட்டு 75 ஆயிரம் இடங்களில் ேயாகா பயிற்சி நடக்கிறது. .இவ்வாறு அவர் பேசினார்.

Related Stories: