சென்னை ஓபன் செஸ் நாளை தொடக்கம்

சென்னை: சர்வதேச அளவிலான 13வது சென்னை ஓபன் சதுரங்கப் போட்டி  சென்னையில் நாளை தொடங்குகிறது. இது குறித்து தமிழ்நாடு செஸ் சங்க நிர்வாகிகள் நேற்று கூறியதாவது: சென்னையில் ஆண்டுதோறும்  பல்வேறு நாடுகளைச் சேர்ந்த  செஸ் வீரர்கள், வீராங்கனைகள் பங்கேற்கும்   சென்னை ஓபன்  செஸ் போட்டி நடக்கிறது. இந்த ஆண்டு 13வது சென்னை ஓபன் கிராண்ட் மாஸ்டர் செஸ் போட்டி  ஜூன் 19-26 வரை நடைபெறும்.  டாக்டர் நா.மகாலிங்கம்  கோப்பைக்கான இந்த போட்டி சென்னை எழும்பூரில் உள்ள தனியார் நட்சத்திர ஓட்டலில் நடக்க உள்ளது.

ரஷ்யா, பெலாரஸ்,  வியட்நாம், கஜகஸ்தான், ஆர்மீனியா,  அமெரிக்கா, அஜர்பைஜான்,  இலங்கை, வங்கதேசம், நேபாளம் மற்றும் இந்தியாவைச் சேர்ந்த 236 வீரர், வீராங்கனைகள் உட்பட மொத்தம் 268 பேர் பங்கேற்க பதிவு செய்துள்ளனர். இந்திய கிராண்ட் மாஸ்டர்கள்  தீபன் சக்ரவர்த்தி, ஜி.கார்த்திகேயன், லக்‌ஷ்மன், சர்வதேச மாஸ்டர்கள் அஜய் கார்த்திகேயன்,  நிதின், ஸ்ரீஹரி, ரவிசந்திரன் சித்தார்த், கொங்குவேல் பொன்னுசாமி, பிரியங்கா ஆகியோர் பட்டம் வெல்லும் முனைப்புடன் களமிறங்குகின்றனர். போட்டியை  (10 சுற்று) தமிழ்நாடு செஸ் சங்கம், அகில இந்திய செஸ் கூட்டமைப்பு இணைந்து நடத்துகின்றன. மொத்த பரிசுத் தொகை ₹ 15 லட்சம். முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கு  கோப்பையுடன்  முறையே ₹3 லட்சம், ₹2 லட்சம், ₹1.25 லட்சம் வழங்கப்படும்.

Related Stories: