அக்னிபாத் திட்டத்தை எதிர்த்து பல மாநிலங்களில் ரயில், பஸ்கள் எரிப்பு; செகந்திராபாத்தில் ஒருவர் பலி; இளைஞர்கள் கொந்தளிப்பு: போராட்டம் பரவியது

பாட்னா: முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து வடமாநிலங்களில் தொடங்கிய போராட்டம் நாடு முழுவதும் பரவி வருகிறது. பல மாநிலங்களில் ரயில்கள், பஸ்களை போராட்டக்காரர்கள் எரித்ததால் பீதி ஏற்பட்டுள்ளது. செகந்திராபாத் ரயில் நிலையத்தில் போராட்டக்காரர்களை விரட்ட போலீசார்  நடத்திய துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் பலியாகி உள்ளார்.

முப்படைகளில் குறுகிய கால ஆட்சேர்ப்புக்கான அக்னிபாதை திட்டத்தை ஒன்றிய அரசு கடந்த 13ம் தேதி அறிவித்தது. இதன்படி 17.5 வயது முதல் 21 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள் 4 ஆண்டுகால ராணுவ பணியில் சேரலாம். இவர்களில் 75 சதவீதம் பேர் 4 ஆண்டுக்குப் பின் பணியிலிருந்து விடுவிக்கப்படுவர். அவர்களுக்கு பென்சன் கிடையாது. இத்திட்டம் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ராணுவத்தில் ஆட்சேர்ப்புக்கான முந்தைய நடவடிக்கைகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், பல ஆண்டுகள் கஷ்டப்பட்டு, தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் இளைஞர்கள் கொந்தளித்துள்ளனர். இதனால், அக்னிபாதை திட்டத்தை எதிர்த்து பீகார், ராஜஸ்தானில் போராட்டங்கள் தொடங்கின. நேற்று முன்தினம் வடமாநிலங்கள் பலவற்றிலும் போராட்டம் பரவியது.

இந்நிலையில், அக்னிபாதை போராட்டம் தென் மாநிலங்கள் உட்பட நாடு முழுவதும் நேற்று பரவியது. தெலங்கானா, பீகார், அரியானா, மத்திய பிரதேசம், உபி உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட மாநிலங்களில் போராட்டம் வன்முறையாக வெடித்துள்ளது. தெலங்கானா மாநிலத்தின் செகந்திராபாத் ரயில் நிலையத்திற்கு வெளியே நேற்று 5000க்கும் மேற்பட்டவர்கள் திரண்டு வந்து ஒன்றிய அரசுக்கு எதிராக கோஷமிட்டனர். அவர்களில் சுமார் 350 பேர் ரயில் நிலையத்திற்குள் நுழைந்து ரயில்கள் மீதும், அங்கிருந்த கடைகள் மீதும் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். அப்போது பயணிகள் ரயில் ஒன்றின் ஏசி பெட்டியில் 40 பயணிகள் அமர்ந்திருந்தனர் உடனடியாக அவர்களை ரயில்வே போலீசார் அவசர அவசரமாக வெளியேற்றியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

ரயில் நிலையத்தில் இருந்த 3 பயணிகள் ரயில்களுக்கு போராட்டக்கார்கள் தீ வைத்ததில் சில பெட்டிகள் எரிந்து நாசமாகின. பல ரயில்களின் ஜன்னல் கண்ணாடிகள் அடித்து நொறுக்கப்பட்டன. இதனால் ரயில் நிலையமே போர்க்களமாக மாறியது. பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த ரயில்வே போலீசார் மீதும் போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தினர். இதனால் வன்முறையை கட்டுக்குள் கொண்டு வர, போலீசார் வானை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். மேலும், தடியடி நடத்தி போராட்டக்காரர்களை விரட்டினர். இந்த கலவரத்தில் ஒருவர் பலியாகி உள்ளார். 15 பேர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். போலீசாரும் சிலர் காயமடைந்தனர். இந்த சம்பவத்தால் ஐதராபாத்தில் மெட்ரோ ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.

இதே போல், பீகாரில் 3வது நாளாக நேற்றும் போராட்டம் தீவிரமாக நடந்தது. பாக்சர், பாகல்பூர், சமஸ்திபூர், முசாபர்பூர் ஆகிய இடங்களில் ரயில்கள் மறிக்கப்பட்டன. லகிசராய், நாலந்தா மற்றும் சமஸ்திபூர் ரயில் நிலையங்களில் 3 எக்ஸ்பிரஸ் ரயில்களை போராட்டக்காரர்கள் தீயிட்டு கொளுத்தினர். இதில் 30 பெட்டிகள் எரிந்து நாசமாகின. ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டிருந்த இரு சக்கரவாகனங்களை தண்டவாளத்தில் போட்டு எரித்தனர். மேலும், பலரும் தண்டவாளத்தில் படுத்துக் கொண்டு போராட்டம் நடத்தியதால் ரயில் சேவை பாதிக்கப்பட்டது.

உபியின் பல்லியா ரயில் நிலையத்திலும் போராட்டக்காரர்கள் ரயில் பெட்டிகளை அடித்து சேதப்படுத்தி கொளுத்தினர். மத்திய பிரதேச மாநிலம் இந்தூரில் லக்மிபாய் நகர் ரயில் நிலையத்தில் சுமார் 600க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் நுழைந்து கல்வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது. அங்கிருந்த பயணிகள் அலறி அடித்துக் கொண்டு ஓடினர். போராட்டத்தில் ஈடுபட்ட 15 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியானா மாநிலத்தின் ரோதக், நர்வானா உள்ளிட்ட பல பகுதிகளில் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்டோர் போராட்டத்தில் குதித்தனர். பரிதாபாத் மாவட்டம் பல்லாப்கர் பகுதியில் நேற்று முன்தினம் பெரும் கலவரம் ஏற்பட்டதால், அப்பகுதியில் நேற்று எஸ்எம்எஸ் மற்றும் மொபைல் இன்டர்நெட் சேவை துண்டிக்கப்பட்டிருந்தது.

தலைநகர் டெல்லியில், அகில இந்திய மாணவர் அமைப்பினர் டெல்லி மெட்ரோ ரயில் நிலையம் முன்பாக போராட்டம் நடத்தியதால், டெல்லி முழுவதும் உள்ள மெட்ரோ ரயில் நிலையங்களின் நுழைவாயில்கள் சிறிது நேரம் மூடப்பட்டன. ஒடிசாவின் கட்டாக்கில் ராணுவத் தேர்வு எழுதி முடிவுக்காக காத்திருக்கும் மாணவர்கள் 100க்கும் மேற்பட்டோர் நெடுஞ்சாலையில் போராட்டம் நடத்தினர். மேலும், கன்டோன்மென்ட் அலுவலகம் முன்பாகவும் அவர்கள் கோஷமிட்டு ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை போலீசார் விரட்டி அடித்தனர். பல மாநிலங்களில் நெடுஞ்சாலைகளில் சென்ற பஸ்களையும் போராட்டக் குழுவினர் எரித்துள்ளனர். டயர்களை எரித்து சாலை மறியல் செய்ததால், பஸ் சேவையும் பாதிக்கப்பட்டது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் பீகார் உள்ளிட்ட மாநிலங்களில் மக்களின் இயல்பு வாழ்க்கையும் பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: