சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றி உரமாக மாற்ற திட்டம்

நாகர்கோவில்: சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றி உரமாக மாற்றும் வகையிலான திட்டத்தின் கீழ், ஆகாய தாமரைகள் அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன. குமரி மாவட்டத்தில் நீர் நிலைகள் உரிய பராமரிப்பின்றி மாசடைந்துள்ளன. குறிப்பாக பல குளங்கள் ஆகாயதாமரைகள் நிரம்பியும், கழிவுகள் மற்றும் குப்பைகளாலும் மிக மோசமாக உள்ளன. இந்த குளங்களில் உள்ள நீரினை பயன்படுத்த முடியாத நிலை உள்ளது. ஆகாய தாமரைகளால் பல குளங்கள் அழிந்து வருகின்றன. இந்த நிலையில் ஏற்கனவே பல்வேறு மாவட்டங்களில் ஆகாயதாமரைகளை உரமாக மாற்றும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் தற்போது சுசீந்திரம் பெரிய குளத்தில் இந்த திட்டத்தை செயல்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான ஆய்வு பணிகள் தொடங்கி நடந்தன. ஆய்வு பணிகள் முடிவடைந்ததை தொடர்ந்து இன்று சுசீந்திரம் பெரிய குளத்தில் ஆகாய தாமரைகளை அகற்றும் பணிகள் நடந்தன.  தொழிலாளர்கள் குளத்துக்குள் இறங்கி ஆகாய தாமரைகளை கரைகளில் ஒதுக்க, பின்னர் அந்த ேஜசிபி மூலம் வெளியே எடுக்கப்பட்டு கரைகளில் குவிக்கப்பட்டுள்ளன.

இது குறித்து அதிகாரிகள் கூறுகையில், ஆகாய தாமரை படருவதால் தண்ணீர் சீராக செல்வதை தடுப்பதுடன், தண்ணீரில் கரைந்துள்ள பிராண வாயுவை எடுப்பதால் மீன்கள் இறக்கின்றன. எனவே இந்த ஆகாய தாமரைகளை புதிய தொழில் நுட்பத்தின் மூலம் திரவம் செலுத்தி காய்ந்து போக செய்து, பின்னர் அவற்றை குளத்தில் இருந்து அப்புறப்படுததி உரமாக மாற்றப்பட உள்ளன. பல்வேறு நகரங்களில் இந்த தொழில் நுட்பத்தின் படி ஆகாய தாமரைகள் அகற்றப்பட்டுள்ளன.

அங்கக திரவம் தெளிப்பான் மூலம் ஆகாய தாமரை செடி மீது தெளிக்கப்படும். 6 நாட்களுக்கு ஒருமுறை வீதம் தெளிப்பன் மூலம் திரவ மருந்து தெளிக்கப்பட்டு கண்காணிப்பு செய்யப்படும். பின்னர் ஆகாய தாமரைகள் முற்றிலும் காய்ந்து விடும். பின்னர் அவை இயந்திரம் மூலம் அகற்றப்படும்.  இந்த பணிகள் தற்போது சுசீந்திரம் பெரிய குளத்தில் நடக்கிறது. இதன் மூலம் நீர் நிலைகள் மாசு ஏற்படுவது தடுக்கப்படும் என்றனர்.

Related Stories: