சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோயிலில் ஆகஸ்ட் மாதத்திற்குள் கும்பாபிஷேகம்: அமைச்சர் சேகர்பாபு பேட்டி

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே சிறுவாச்சூரில் புகழ்பெற்ற மதுரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்துசமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலில் வாரத்தில் திங்கள், வெள்ளிக்கிழமைகளில் மட்டும் நடை திறக்கப்பட்டு வழிபாடு நடத்தப்படுவது வழக்கம். கடந்த ஆண்டு இக்கோயில் மேற்கு பகுதியில் பெரியசாமி மலையடிவாரத்தில் உள்ள செங்கமலையார் கோயில், பெரியசாமி கோயில்களில் இருந்த 30க்கும் மேற்பட்ட சுடுமண் சிற்பங்கள் உடைக்கப்பட்டது.

இதனால் புதிய சுடுமண் சிற்பங்கள் அமைக்கும் பணிகளும், மதுரகாளியம்மன் கோயில் திருப்பணிகளும் நடந்து வருகிறது. இந்நிலையில் இன்று காலை இந்துசமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு மதுரகாளியம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்து விட்டு, திருப்பணிகளை ஆய்வுசெய்தார்.

பின்னர் அமைச்சர் சேகர்பாபு அளித்த பேட்டி:

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் அனைத்தும் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு ஏற்ற வகையில் இருக்க வேண்டும். எங்காவது சிறிது பிரச்னைகள் இருந்தால் அதனை நேரில் ஆய்வுசெய்து சரிசெய்ய வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில், சிறுவாச்சூர் கோயிலில் ஆய்வு செய்யப்பட்டுள்ளது. இக்கோயிலில் ஏற்கனவே 2014ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது.

தற்போது புனரமைப்பு செய்துவரும் நிலையில் பணிகள் விரைந்து முடிக்கப்பட்டு வருகிற ஆகஸ்ட் மாதத்திற்குள் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பக்தர்கள் சாமி தரிசனத்திற்காக மலைக்கோயிலுக்கு செல்லும் பாதை விரைவில் சரி செய்யப்படும். மலைக்கோயிலில் சுடுமண் சிற்பங்கள் நிறுவப்பட்டு, சிற்பங்களுக்கு போதுமான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்து தரப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: