பவுஞ்சூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணி

செய்யூர்: அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் உலக குருதி கொடையாளர் தினத்தில் விழிப்புணர்வு பேரணி   நடந்தது. செங்கல்பட்டு மாவட்டம், லத்தூர் ஒன்றியம் பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில், உலக குருதி கொடையாளர் தினம் நேற்று கடைப்பிடிக்கப்பட்டது. இதில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துதுறை சார்பில் உலக குருதி கொடையாளர் தின விழிப்புணர்வு பேரணியில் வட்டார மருத்துவ அலுவலர் மருத்துவர் கங்காதரன்  தலைமை தாங்கினார். திருவாதூர் ஊராட்சி மன்ற தலைவர் சுசீலா வெங்கடேசன் முன்னிலை வகித்தார். பிடிஓ அலுவலக வளாகத்தில் துவங்கிய பேரணியை, லத்தூர் ஒன்றியக்குழு பெருந்தலைவர் சுபலட்சுமி பாபு கொடியசைத்து துவக்கி வைத்தார்.  

இந்த பேரணி பவுஞ்சூரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, பவுஞ்சூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை வந்தடைந்தது. பேரணியில், பள்ளி மாணவர்கள் செவிலியர்கள் மற்றும் சுகாதார பணியாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு  ரத்த தானம் அளிப்பது குறித்து விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியவாறு பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினர். அப்போது, அனைவரும் ரத்த தானம் செய்வோம் என உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.  அதனை தொடர்ந்து, அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் தன்னார்வ குருதி கொடையாளர்களுக்கு பொன்னாடை அணிவித்து, பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில், ஒன்றிய குழு துணை பெருந்தலைவர் கிருஷ்ணவேணி தணிகாசலம், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பாபு, வெங்கடேசன், திமுக ஒன்றிய குழு உறுப்பினர் பாரதிபாபு உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: