மாவட்டத்தில் ஊராட்சி மன்ற தலைவர்கள் ஊர் கூடி ஊரணி காப்போம் இயக்கத்தின் மூலம் மழைநீர் காவலர் விருதுகள் பெறலாம்: மாவட்ட ஆட்சியர் தகவல்

திருவள்ளூர்: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் ‘ஊர் கூடி ஊரணி காப்போம்” இயக்கத்தின் மூலம்  மழைநீர் காவலர் விருதுகள் பெறலாம் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.திருவள்ளூர் மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் பல்வேறு நீர் மேலாண்மை பணிகளான தடுப்பணை கட்டுதல், கசிவுநீர் குட்டை தூர்வாருதல், வரவு கால்வாய் மற்றும் போக்கு கால்வாய் தூர்வாருதல், புறம்போக்கு நிலங்களில் நீர் உறிஞ்சு குழிகள் வெட்டுதல்,மரக்கன்றுகள் நடுதல், அரசு கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு அமைப்புகள் அமைத்தல் போன்ற நீர் மேலாண்மை பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், மாவட்ட நிர்வாகம் ‘ஊர் கூடி ஊரணி காப்போம்” என்ற இயக்கத்தின் மூலம் இப்பணிகள் முன்னெடுக்கப்படுகிறது.

இதன் ஒரு பகுதியாக திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஊரக பகுதிகளில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து நீர் நிலைகளையும் தூர்வாருதல், பராமரித்தல், புதிய நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளுதல் பணிகளை ஊக்குவிக்கும் விதமாக ஊராட்சி அளவில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு போட்டிகள் நடத்தப்படவுள்ளது. இதில் சிறப்பாக செயல்படும் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ‘‘மழைநீர் காவலர்” என்ற விருது வட்டார அளவில் 3 விருதுகளும், மாவட்ட அளவில் 3 விருதுகளும் வழங்கப்பட உள்ளது.ஊராட்சிகளில் நீர் மேலாண்மை பணிகளை மேற்கொள்ளப்பட்டதை தரமதிப்பீடு மதிப்பீட்டுக் குழுவால் ஆய்வு செய்யப்பட்டு மதிப்பெண்கள் வழங்கப்படும். பணிகளின் தரம், பயன்பாடு, புது முயற்சிகள், சுற்றுச்சூழல் மேம்பாடு, மரம் வளர்த்தல் மற்றும் நாற்றங்கால் அமைத்தல் ஆகிய பணிகளுக்கு கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்படும்.எனவே திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்களும் ‘ஊர் கூடி ஊரணி காப்போம்” இயக்கத்தில் பங்கு பெற்று தங்கள் ஊராட்சிகளில் உள்ள நீர் மேலாண்மை பணிகளை சிறப்பான முறையில் மேற்கொண்டு விருதுகள் பெறலாம் என்று மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Related Stories: