புளியந்தோப்பில் 15 வயது சிறுமியை திருமணம் செய்த 17 வயது சிறுவன்: போலீசில் புகார்

சென்னை: புளியந்தோப்பில் 15 வயது சிறுமியை 17 வயது சிறுவன் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாகரீக வளர்ச்சியின் காரணமாகவும், செல்போன்களின் அபரிவிதமான வளர்ச்சியின் காரணமாகவும் பல்வேறு நல்ல விஷயங்கள் நடைபெற்றாலும் அதற்கு நேர்மாறாக தீமையான விஷயங்களும் நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கின்றன. குறிப்பாக இளைய தலைமுறையினர் மத்தியில் செல்போன் மிகவும் தீங்கு விளைவிக்கும் ஒரு கருவியாகவே மாறிவிட்டது. ஒருவரை ஒருவர் எளிதில் தொடர்பு கொள்ளாமல் இருந்த காலகட்டத்தில் குற்றச்செயல்கள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்ற செயல்கள் மிகவும் குறைவாகவே இருந்தன. ஆனால் தற்போது செல்போன்களின் பயன்பாடு காரணமாக தினமும் ஒவ்வொரு நிமிடமும் ஒருவர் மற்றவருடன் தொடர்பில் இருக்கக்கடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை பலரும் தவறாக பயன்படுத்திக் கொண்டு சிறுவயதிலேயே தங்களது வாழ்க்கையை இழக்கும் சூழ்நிலையை தேடிக் கொள்கின்றனர். குறிப்பாக பள்ளி மாணவ, மாணவிகள் செல்போன்களை அதிக அளவில் பயன்படுத்தவதாக சமீபத்திய ஆய்வறிக்கை ஒன்று வெட்ட வெளிச்சமாகியுள்ளது.

அந்த வகையில் நேற்று முன்தினம் பள்ளி கல்வித்துறை சார்பில் ஒரு சுற்றறிக்கை அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பள்ளிகளில் செல்போன் எடுத்து வந்தால் பறிமுதல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும் கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா காலகட்டத்தில் ஒவ்வொரு மாணவர்களும் செல்போனை வாங்கி அதில் ஆன்லைன் வகுப்பு பாடம் படித்து வந்த நிலையில் தற்போது மாணவ, மாணவிகள் செல்போனுக்கு அடிமையாகி விட்ட நிலையில் அதனை புறந்தள்ளிவிட்டு வகுப்புக்கு செல்ல அவர்கள் உடனடியாக ஒத்து வருவார்களா என்பதை பொறுத்திருந்தே பார்க்க வேண்டும். இவ்வாறு பள்ளியில் படிக்கும்போதே காதல் வயப்பட்டு செல்போனில் தினமும் பேசி பழகி 15 வயது பள்ளி மாணவி ஒருவர் 17 வயது சிறுவனை சாலையில் வைத்து திருமணம் செய்து கொண்ட சம்பவம் புளியந்தோப்பில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.சென்னையில் செயல்பட்டு வரும் குழந்தைகள் உதவி மையத்திற்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு ஒரு புகார் வந்தது. அதில் 15 வயது சிறுமி, 17 வயது சிறுவனை திருமணம் செய்துள்ளதாகவும், அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இதுகுறித்து விசாரணை நடத்தும்படி ராயபுரம் பகுதியைச் சேர்ந்த குழந்தைகள் நலக்கழு உறுப்பினர் காருண்யா தேவிக்கு குழந்தைகள் அமைப்பு உத்தரவிட்டிருந்தது.

இதனையடுத்து காருண்யா தேவி மற்றும் குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் விசாரணை நடத்தியதில் கொடுங்கையூர் பகுதியில் தனது மாமா வீட்டில் தங்கி படித்து வரும் 15 வயது சிறுமி அவளுடன் படித்துவரும் 17 வயது சிறுவனை காதலித்து வந்ததாகவும், தினமும் அவர்கள் செல்போனில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்த நிலையில் சிறுமி வீட்டை விட்டு அடிக்கடி வெளியேறி சிறுவனுடன் பல இடங்களுக்குச் சென்று பழகி வந்தாள். இந்நிலையில், கடந்த 7ம் தேதி புளியந்தோப்பு பகுதியில் உள்ள எல்லை அம்மன் கோயில் வாசலில் வைத்து சிறுவன் அந்த சிறுமிக்கு தாலி கட்டியுள்ளான். இதனை சிறுவனின் நண்பர்கள் தங்கள் செல்போனில் வீடியோ எடுத்து அதனை மற்ற நண்பர்களுக்கு அனுப்பி வைரலாக்கி உள்ளனர். மேலும் சிறுவன், சிறுமியை தாலி கட்டிக்கொண்டு குங்குமம் வைத்து அழைத்துச் செல்லும் வீடியோ காண்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இதுகுறித்து குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் சிறுமியிடம் விசாரணை மேற்கொண்டதில் இதில் சிறுமி அந்த சிறுவனுடன் பலமுறை பாலியல் உறவில் ஈடுபட்டதும் தெரியவந்தது. இதனையடுத்து குழந்தைகள் நல அமைப்பை சேர்ந்தவர்கள் இதுகுறித்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்துள்ளார். புகார் மனுவை பெற்றுக்கொண்ட இன்ஸ்பெக்டர் கோமதி இதுகுறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்த விஷயம் வெளியே தெரிந்ததும் சிறுவன் தற்போது தலைமறைவாகி விட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து புளியந்தோப்பு அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார் இதுகுறித்து சிறுமியிடமும் சிறுவனின் குடும்பத்தினரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். படிக்கிற வயதில் முழுமையாக படிப்பை இன்னும் முடிக்காத நிலையில் பள்ளிப் பருவத்திலேயே தாலி கட்டிக்கொண்டு சிறுவர் சிறுமியர் பாலியல் உறவில் ஈடுபடுவது வருங்கால சந்ததியினர் எதை நோக்கி பயணிக்கின்றனர் என்ற கேள்வியையும். ஒரு விதமான அச்சத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: