காலி மது பாட்டில் கொடுத்தால் ரூ.10 டாஸ்மாக் கடைகளில் அமலுக்கு வந்தது

கொடைக்கானல்: வனப்பகுதிகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நேற்று முதல் அமலானது. தமிழகத்தில் வனப்பகுதிகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் மது வாங்குபவர்கள், குடித்துவிட்டு பாட்டில்களை காட்டுக்குள் வீசிவிட்டு செல்கின்றனர். உடைந்த கண்ணாடிச் சிதறல்கள் கால்களில் குத்தி வனவிலங்குகள் பாதிக்கப்படுகின்றன. இதனை தடுக்கும்விதமாக, வனப்பகுதிகளை ஒட்டியுள்ள டாஸ்மாக் கடைகளில் காலி மதுபாட்டிலை லேபிளுடன் திரும்ப வழங்கினால் ரூ.10 திரும்ப பெறும் திட்டம் தமிழகம் முழுவதும் நேற்று அமலானது.

திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் குறிப்பிட்ட 10 டாஸ்மாக் கடைகளில் மது பாட்டில்களை திரும்ப பெறும் திட்டம் நேற்று முதல் அமலுக்கு வந்தது. இந்த 10 கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விட 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து மது பாட்டில்களை பெற வேண்டும் என்று கலெக்டர் விசாகன் அறிவித்துள்ளார். அந்த காலி பாட்டில்களை மீண்டும் அதே கடையில் கொடுத்து 10 ரூபாயை திரும்ப பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று டாஸ்மாக் கடைகளில் 10 ரூபாய் கூடுதலாக கொடுத்து லேபிள் ஒட்டிய மது பாட்டில்களை வாங்கிச் சென்றனர். மதுவை குடித்த பிறகு அவற்றை டாஸ்மாக் கடைகளில் கொடுத்து திரும்ப பெற்றனர். இதனால் கொடைக்கானலில் கண்ட இடங்களில் மதுபாட்டில்கள் வீசுவது தடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: