வாணியம்பாடி அருகே சுற்றுச்சுவர் இல்லாததால் மாலை நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அரசு பள்ளிக்கூடம்: அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை

ஆலங்காயம்: வாணியம்பாடி அருகே சுற்றுச்சுவர் இல்லாததால் மாலை நேரத்தில் பள்ளிக்கூடம் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவர்கள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த பெரியகுரும்பதெரு பகுதியில், அரசு உயர்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் 700க்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகிறார்கள். பள்ளிக்கூடத்தை சுற்றி சுற்றுச்சுவர் இல்லாததால், மாலை நேரங்களில் சமூக விரோதிகள் சிலர் குடிப்பதும், பிற சமூக விரோத செயல்களிலும் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாக அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

இதனால், மாணவர்கள் பள்ளிக்கு நுழையவே முகம் சுழிக்க கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. மேலும், இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் கட்டி தர வேண்டும் என்று ஏற்கனவே கோரிக்கை வைக்கப்பட்டதன் அடிப்படையில், கடந்த 6 மாதத்திற்கு முன்பே 23 லட்ச ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து சுற்றுச்சுவர் கட்டுவதற்கான பணி ஆணை வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், சுற்றுச்சுவர் கட்டப்படாததால், அரசு உயர்நிலை பள்ளி சமூக விரோதிகளின் கூடாரமாக மாறிவருவது அப்பகுதி மக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி வருகிறது.

எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பள்ளி சுற்றுச் சுவர் கட்டித்தர உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்பது பள்ளி மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

Related Stories: