கோயில் தேர் சரிந்து விழுந்து பலியான 2 பேரின் உடலுக்கு அமைச்சர் அஞ்சலி: ரூ.10 லட்சம் நிவாரண தொகை வழங்கினார்

தர்மபுரி: தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் வட்டம் பாப்பாரப்பட்டியை அடுத்த மாதேஹள்ளி கிராமத்தில் நூற்றாண்டுக்கும் மேலான பழமைவாய்ந்த 18 கிராமங்களுக்கு சொந்தமான ஸ்ரீகாளியம்மன் கோயில் உள்ளது. இக்கோயில் திருவிழா வைகாசி மாதத்தில் நடப்பது வழக்கம். 18 கிராம மக்கள் ஒன்று கூடி அம்மனுக்கு படையலிட்டு 5 நாட்கள் விழா நடத்துவார்கள். கடந்த 2 ஆண்டாக கொரோனா தொற்றால் திருவிழா நடத்தப்படவில்லை. தற்போது கொரோனா கட்டுப்பாடுகள் முடிந்த நிலையில், கடந்த 5 நாட்களாக காளியம்மன் ேகாயில் திருவிழா கோலாகலமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான பொது மக்கள் திருவிழாவில் கலந்து கொண்டு சிறப்பு பூஜை செய்து வழிபட்டனர்.

திருவிழாவின் முக்கிய நிகழ்வாக தேரோட்டம் நேற்று நடந்தது. மாலை 4 மணியளவில் தேரை பொதுமக்கள் வடம் பிடித்து இழுத்து வந்தனர். தேரை நிலை சேர்ப்பிக்கும் இடத்தின் அருகே சுமார் 100 அடி தூரத்தில் வயல் வெளியில் இழுத்துக் கொண்டு வரும்போது வரப்பில் ஏறி இறங்கிய நிலையில், திடீரென நிலை தடுமாறி தேர் சாய்ந்தது.  அப்போது தேரின் இடிபாடுகளில் 10 பேர் சிக்கிக்கொண்டு கூச்சலிட்டனர். தகவலறிந்து வந்த தீயணைப்பு துறையினர் மற்றும் போலீசார், விபத்தில் சிக்கியவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

அங்கு சிகிச்சை ெபற்று வந்த மனோகரன் (57), சரவணன் (50) ஆகிய 2 பேர் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்தனர். மேலும் மாதேஸ், முருகன், பெருமாள் உள்ளிட்ட 8 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இன்று காலை வேளாண்மை துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தர்மபுரி அரசு மருத்துவமனை மருத்துவக்கல்லூரிக்கு வந்தார். அங்கு தேர் விபத்தில் சிக்கி உயிரிழந்த மனோகரன், சரவணன் ஆகியோரின் உடல்களுக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த நிவாரண உதவியான தலா ரூ.5 லட்சத்தை வழங்கி ஆறுதல் கூறினார்.

இதனை தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வரும் முருகன், மாதேஷ், பெருமாள், மாது ஆகிய 4 பேரையும் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அவர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்த, தலா ரூ.50 ஆயிரம் நிவாரண உதவியை வழங்கினார். இதனை தொடர்ந்து மாதேஹள்ளியில் தேர் சாய்ந்து விபத்து ஏற்பட்ட இடத்திற்கு அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

Related Stories: