அரசு ஆதிதிராவிடர் நல பள்ளியில் 10ம் வகுப்பில் அமர்ந்து தமிழ்ஆசிரியை பாடம் நடத்தும் முறையை கண்காணித்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்: மாணவர்கள் நெகிழ்ச்சி

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அரசு பள்ளிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று, 10ம் வகுப்பு அறையில் அமர்ந்து தமிழ் ஆசிரியை பாடம் நடத்தும் முறையை கண்காணித்தது நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா தொற்று காரணமாக மாணவர்களின் கற்றலில் ஏற்பட்ட இடைவெளியை குறைப்பதற்காக ‘எண்ணும் எழுத்தும்’ திட்டத்தை தமிழகம் முழுவதும் முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார். திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியம் அழிஞ்சிவாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில் இந்த திட்டத்தை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டுவிட்டு நேற்று காலை 11 மணிக்கு திருவள்ளூர் மாவட்டத்தில் இருந்து சென்னை, தலைமை செயலகம் திரும்பினார்.

அப்போது வரும் வழியில், திருவள்ளூர் மாவட்டம் புழல் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார். அந்த பள்ளியில், 10ம் வகுப்பு நடைபெறும் வகுப்பறைக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் திடீரென சென்றார். அங்கு, தமிழ் ஆசிரியை ஷகிலா மாணவர்களுக்கு பாடம் நடத்திக் கொண்டிருந்தார். முதல்வர் மு.க.ஸ்டாலினும், மாணவர்களோடு மாணவனாக அந்த வகுப்பறையில் உள்ள பெஞ்சில் அமர்ந்து, ஆசிரியை பாடம் நடத்தும் முறையை கண்காணித்தார். அருகில், உள்ள மாணவனின் நோட்டு புத்தகத்தையும் முதல்வர் வாங்கி, அதில் மாணவன், என்ன எழுதியுள்ளான் என்றும் ஆய்வு செய்தார். அப்போது, பள்ளி கல்வித்துறை அமைச்சர் மகேஷ் பொய்யாமொழியும் வகுப்பறையில் பின்வரிசை பெஞ்சில் அமர்ந்து பாடம் நடத்தும் முறையை கவனித்தார்.

முதல்வர் மு.க.ஸ்டாலின் நேரடியாக வகுப்பறைக்குள் வந்து பாடம் நடத்தும் முறையை கவனித்ததால் அங்கிருந்த மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். சிறிது நேரம் பாடம் நடத்தும் முறையை கவனித்த முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழ் ஆசிரியை ஷகிலாவை பாராட்டிவிட்டு, மாணவர்களிடம் வணக்கம் சொல்லிவிட்டு அங்கிருந்து புறப்பட்டார். மாணவர்களும் எழுந்து நின்று முதல்வருக்கு வணக்கம் தெரிவித்து வழியனுப்பி வைத்தனர். தமிழக முதல்வர் ஒருவர், ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளிக்கு நேரில் வந்து ஆய்வு செய்ததும், வகுப்பறையில் அமர்ந்து பாடம் நடத்தும் முறையை கண்காணித்ததும் அங்கிருந்த ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

* கழிப்பறை பகுதியிலும் ஆய்வு

புழல் ஒன்றியத்தில் உள்ள அரசு ஆதிதிராவிடர் நல மேல்நிலைப்பள்ளியில் அமைந்துள்ள கழிப்பறை பகுதிக்கும் சென்று, கழிப்பறை வளாகம் சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா, கழிவறை தொட்டிகள் மூடி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்தும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார்.

Related Stories: