ராகுல் காந்தியிடம் விசாரணை எதிரொலி அமலாக்கத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு காங். போராட்டம்: சென்னையில் 500 பேர் கைதாகி விடுதலை

சென்னை: ராகுல் காந்தியிடம் அமலாக்க துறையினர் விசாரணை நடத்தியதை கண்டித்து சென்னையில் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் முற்றுகை போராட்டம் நடத்தினர். நேஷனல் ஹெரால்டில் முறைகேடு நடைபெற்றதாக கூறி காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் அமலாக்கத்துறை முன் ஆஜராக உத்தரவிடப்பட்டுள்ளது. இதையடுத்து அமலாக்கத்துறை அலுவலகத்தில் ராகுல்காந்தி நேற்று ஆஜரானார். இந்த நிலையில், ராகுல்காந்தியிடம் ஒன்றிய அமலாக்கத்துறை விசாரணை நடத்த எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சி நேற்று நாடு தழுவிய அளவில் ஆர்ப்பாட்டம் நடத்தியது. தமிழக காங்கிரஸ் சார்பில், சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் உள்ள அமலாக்கத்துறை அலுவலகம் உள்ள சாஸ்திரி பவன் முன் தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில், செயல் தலைவர் மயூரா ஜெயக்குமார், துணைத் தலைவர்கள் கோபண்ணா, பொன்.கிருஷ்ணமூர்த்தி, ஆர்.தாமோதரன், பொதுச்செயலாளர்கள் ரங்கபாஷ்யம், இல.பாஸ்கரன், முன்னாள் பொருளாளர் நாசே. ராமச்சந்திரன், சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை, எம்எல்ஏக்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ், ஊட்டி கணேசன், விஜயதாரணி, ரூபி மனோகரன், ஹசன் மவுலானா, மாவட்ட தலைவர்கள் எம்.எஸ்.திரவியம், சிவ ராஜசேகரன், நாஞ்சில் பிரசாத், முத்தழகன், டில்லி பாபு, ரஞ்சன் குமார், நிர்வாகிகள் சுமதி அன்பரசு, மயிலை தரணி, திருவான்மியூர் மனோகரன், காண்டீபன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

அமலாக்கத்துறையை கண்டித்து காங்கிரஸ் கொடி, கண்டன பதாகைகளை கையில் ஏந்தியவாறு ஊர்வலமாக வந்து ஏராளமானோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர். இதன் காரணமாக அப்பகுதி முழுவதும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. ஆர்பாட்டக்காரர்களை தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும் காங்கிரசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் கட்சியினர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட சுமார் 500 காங்கிரசாரை போலீசார் கைது செய்தனர். பின்னர், அனைவரும் மாலையில் விடுதலை செய்யப்பட்டனர்.

Related Stories: