புளியந்தோப்பு காவல் மாவட்டம் பிரிப்பு குற்றச் சம்பவங்களை குறைக்க நடவடிக்கை: பொதுமக்கள் நிம்மதி

பெரம்பூர்: சென்னையில் நிர்வாக வசதிக்காகவும், போலீசாரின் வேலை பணிச்சுமையை குறைப்பதற்காகவும், மொத்தமாக இருந்த காவல் மாவட்டங்கள் பல்வேறு காலகட்டங்களில் ஒவ்வொன்றாக பிரிக்கப்பட்டு, சென்னையில் 12 காவல் மாவட்டங்கள் இயங்கி வந்தன. அதன் பின்னர் நிர்வாக வசதிக்காக, தற்போது தாம்பரம் மற்றும் ஆவடி காவல் மாவட்டங்கள் தனியாக பிரிக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், சென்னையில் இருந்த அம்பத்தூர் காவல் நிலையம், ஆவடி காவல் மாவட்டத்தில் சேர்ந்தது. அதன் பின்பு சென்னையில் காவல் மாவட்டத்தின் எண்ணிக்கை 11 ஆக குறைந்தது. இந்நிலையில் மீண்டும் கொளத்தூர் காவல் மாவட்டம் என்ற ஒரு காவல் மாவட்டம் உருவாக்கப்பட்டு, மீண்டும் சென்னையில் உள்ள சில காவல் நிலையங்கள் அந்த காவல் மாவட்டத்துடன் சேர்க்கப்பட உள்ளன.

சென்னையில் அதிக குற்ற செயல்கள் நடைபெறும் காவல் மாவட்டமாகவும், போலீசார் பணிக்கு செல்ல விரும்பாத ஒரு காவல் மாவட்டமாகவும் இருப்பது புளியந்தோப்பு காவல் மாவட்டம். 2002ம் ஆண்டு 7ம் மாதம் வடசென்னை குற்றப்பிரிவு துணை ஆணையரிடம் இருந்து புளியந்தோப்பு காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டது. இதில் கொடுங்கையூர், எம்கேபி நகர், வியாசர்பாடி, பேசின பிரிட்ஜ், புளியந்தோப்பு, ஓட்டேரி, செம்பியம், திருவிக நகர், பெரவள்ளூர் ஆகிய 9 காவல் நிலையங்கள் அடங்கும். குறிப்பாக, வியாசர்பாடி, எம்கேபி நகர், புளியந்தோப்பு உள்ளிட்ட காவல் நிலையங்களில் குற்ற செயல்கள் அதிகமாக நடைபெறும். பொதுவாக புளியந்தோப்பு காவல் மாவட்டம் என்றாலே வருமானம் குறைவு, வேலை அதிகம் என்ற ரீதியில் பெரும்பாலான காவலர்கள் இங்கு பணி புரிவதை தவிர்த்து வருகின்றனர்.

இன்னும் சொல்லப்போனால் காவல்துறையில் தவறு செய்தவர்கள் புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு மாற்றப்படும் ஒரு சம்பிரதாயமும் உயர் அதிகாரிகளிடம் இருந்து வந்தது. புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகள் அந்த காலத்தில் ஆதி ஆந்திரா எனப்படும் பகுதியுடன் இணைந்து காணப்பட்ட பகுதிகள். குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் தங்களை பாதுகாத்துக் கொள்ளவும், கண்டுபிடிக்க முடியாத இடத்தில் வந்து தங்கிச் செல்லும் இடமாகவும் ஒரு காலத்தில் வியாசர்பாடி, எம்கேபி நகர் உள்ளிட்ட பகுதிகள் இருந்தன.

நாளடைவில் ஆதி ஆந்திரா வழித்தோன்றல் பரம்பரையை சேர்ந்தவர்கள் இந்த பகுதியில் பூர்வகுடிகளாக இருந்து தற்போது வரை இருந்து வருகின்றனர். இதனால் இந்த பகுதியில் வன்முறை கலாச்சாரம் அதிகம் என்றும் ஒரு தரப்பினர் கூறுகின்றனர். மேலும் இந்தப் பகுதியில் வசிக்கும் பர்மாவிலிருந்து வந்த அகதிகள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தற்போது வரை வாழ்ந்து வருகின்றனர். இந்த இருவேறு பூர்வகுடிகளால் சுமார் 30 வருடங்களுக்கு முன்பு அந்த பகுதியில் வன்முறை கலாச்சாரம் அதிக அளவில் காணப்பட்டது.

அதன்பிறகு அவர்களது அடியாட்கள் என ஒன்றன்பின் ஒன்றாக கூலிப்படையினர் அதிகரித்து, வெட்டுக்குத்து சம்பவங்களும் அவ்வப்போது அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் 1996 மற்றும் 97ம் ஆண்டுகளில் வியாசர்பாடியில் அப்பு என்ற ரவுடி மிகப் பிரபலம். அவரது கூட்டாளிகளான சேரா, காதுகுத்து ரவி, வெள்ளை ரவி உள்ளிட்டோர் அப்பகுதியில் பிரபலமான ரவுடிகளாக வலம் வந்தனர். மற்றொருபுரம் வியாசர்பாடியில் நாகேந்திரன் என்ற ரவுடியும் அவரது ஆட்களும் பிரபலமானவர்கள். இந்த இரு ரவுடி கும்பல்களும் பல்வேறு சூழ்நிலைகளில் அடுத்தடுத்த இடங்களை உருவாக்கி பலபேர் இந்த புளியந்தோப்பு சரகத்தில் இறந்துள்ளனர். அந்த வகையில் புளியந்தோப்பு சரகம் ஆரம்பிக்கப்பட்டு இந்த 20 ஆண்டுகளில் சுமார் 300 கொலைகள் வரை நடந்துள்ளன.

இந்த 20 ஆண்டுகளில் புளியந்தோப்பு சரகத்திற்கு 16 துணை கமிஷனர்கள் பணிபுரிந்துள்ளனர். 2002ம் ஆண்டு முதன்முதலில் புளியந்தோப்பு காவல் மாவட்டம் ஆரம்பிக்கப்பட்டபோது சக்திவேல் துணை கமிஷனராக பொறுப்பேற்றார். இதுவரை அதிகபட்சமாக சம்பத்குமார் என்ற துணை கமிஷனர் 4 வருடங்கள் 3 மாதம் இங்கு பணிபுரிந்துள்ளார். இதுவரை இருந்த துணை கமிஷனர்களில் 2003ம் ஆண்டு இருந்த சமுத்திர பாண்டி, 2015ம் ஆண்டு இருந்த மயில்வாகனம், 2017ம் ஆண்டு இருந்த சுதாகர் உள்ளிட்ட துணை கமிஷனர்கள் தங்களது வேலையில் சிறப்பான பங்களிப்பை அளித்து பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்றனர்.

இதேபோல், அமுல் ஸ்டான்லி ஆனந்த், 2010, 11ம் ஆண்டு புளியந்தோப்பில் வேலை செய்த  மனோகரன், செம்பியம் காவல் நிலையத்தில் வேலை செய்த உக்கிரபாண்டி,  கொடுங்கையூர் காவல்நிலையத்தில் பணிபுரிந்த ஜவகர் உள்ளிட்ட இன்ஸ்பெக்டர்கள்  நேர்மையாக இருந்து மக்கள் மனதில் இடம் பிடித்தனர். அந்தவகையில் வெளியிலிருந்து பார்ப்பதற்கு பல்வேறு அச்சுறுத்தல்களை புளியந்தோப்பு காவல் மாவட்டம் கொடுத்திருந்தாலும், பல திறமையான காவல்துறை அதிகாரிகளால் பொதுமக்கள் பெரிதளவில் பாதிக்கப்படாமல் இன்றளவும் பாதுகாப்பாக உள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் இந்த புளியந்தோப்பு காவல் மாவட்டம் பிரிக்கப்பட்டு இந்த காவல் மாவட்டத்தில் உள்ள பெரவள்ளூர் காவல் நிலையம் கொளத்தூர் காவல் மாவட்டத்திற்கு செல்ல உள்ளது. இதன்மூலம் குற்றச் சம்பவங்களை குறைக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

* கண்டுபிடிக்க முடியாத இரண்டு கொலைகள்

புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட கொடுங்கையூர் பகுதியில் கடந்த 2014ம் ஆண்டு செல்வி என்ற பெண் கழுத்து இறுக்கப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவரது நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தன. நிர்வாண கோலத்தில் போலீசார் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர். இதேபோல், 2015ம் ஆண்டு திருவிக நகர் காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதியில் மற்றொரு செல்வி, கழுத்து அறுபட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இவரும் நிர்வாண கோலத்தில் இருந்தார். அவரிடம் இருந்தும் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு இருந்தது. இந்த இரண்டு கொலைகளிலும் இதுவரை குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை.

* ஒரு என்கவுன்டர் கூட இல்லை

ரவுடிகள் அதிக நிறைந்த காவல் மாவட்டம் என்றாலும் இதுவரை புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்குள் எந்த ஒரு என்கவுன்டர் சம்பவங்களும் நடைபெறவில்லை. ஆனால் புளியந்தோப்பு காவல் மாவட்டத்தை சேர்ந்த போலீசார் வெளியே சென்று 4 என்கவுன்டர்கள் செய்துள்ளனர். 2006ம் ஆண்டு ஓசூரில் வைத்து வெள்ளை ரவியை என்கவுன்டர் செய்தனர். 2004ம் ஆண்டு புழல் பகுதியில் வைத்து ராஜ்குமார் என்பவரை என்கவுன்டர் செய்தனர். கொரட்டூரில் மீரான் என்ற ரவுடியையும், மாதவரம் பகுதியில் வைத்து வல்லரசு என்ற ரவுடியை இன்ஸ்பெக்டர்கள் ஜார்ஜ் மில்லர், ரவி ஆகியோர் என்கவுன்டர் செய்தனர்

* பெரிய வன்முறை

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் பெரிய வன்முறையாக பார்க்கப்படுவது கடந்த 20 ஆண்டுகளில் ஜல்லிக்கட்டு போராட்டத்தின்போது எருக்கஞ்சேரி பகுதியில் போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ஜீப் எரிக்கப்பட்டு, பேருந்து, ஆம்புலன்ஸ் உள்ளிட்ட வாகனங்கள் அடித்து நொறுக்கப்பட்டது தான். இதேபோல், கொடுங்கையூர் மீனாம்பாள் சாலையில் சிப்ஸ் கடையில் சிலிண்டர் வெடித்து  ஏற்பட்ட விபத்தில் 6 பேர் உயிரிழந்தனர் 27 பேர் காயமடைந்தனர். இதுவே மிகப்பெரிய விபத்து.

* மத கலவரம்

புளியந்தோப்பு காவல் மாவட்டத்திற்கு உட்பட்ட பகுதி வழியாக ஆண்டுதோறும் விநாயகர் ஊர்வலம் மற்றும் திருப்பதி திருக்குடை செல்வது வழக்கம் அந்த வகையில் 2005, 2006, 2007 ஆகிய 3 வருடமும் விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது பிரச்னை ஏற்பட்டது. அந்த நாள் முதல் தொடர்ந்து விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மற்றும் திருப்பதி திருக்குடை நடைபெறும் வேளைகளில் அதிகமான அளவு போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்படுவது வழக்கம்.

* அரசியல் கொலை

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் அரசியல் கொலைகளாக 1999ம் ஆண்டு அதிமுகவை சேர்ந்த ஸ்டான்லி சண்முகம், 2013ம் ஆண்டு திமுகவை சேர்ந்த இடிமுரசு இளங்கோ, புரட்சி பாரதம் கட்சியை சேர்ந்த தி.ரவி அகிய 3 பேர் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

* கடத்தல் அதிகம்

புளியந்தோப்பு காவல் மாவட்டத்தில் பெரம்பூர், வியாசர்பாடி, பேசின் பிரிட்ஜ் உள்ளிட்ட ரயில் நிலையங்கள் வருகின்றன. வெளி மாநிலங்களில் இருந்து கொண்டு வரப்படும் கடத்தல் பொருட்கள் பேசின்பிரிட்ஜ் மற்றும் பெரம்பூர் ரயில் நிலையங்களில் இருந்து அதிகாலை நேரத்தில் வட சென்னையின் பல்வேறு பகுதிகளுக்கு எடுத்துச் செல்லப்பட்டு வருகின்றன.

Related Stories: