குமரி -கேரள எல்லையில் தெள்ளு காய்ச்சல் பாதித்து மேலும் ஒரு பெண் மரணம்: பலி எண்ணிக்கை 2 ஆக உயர்வு

திருவனந்தபுரம்: பூச்சிகள்  மூலம் பரவும் தெள்ளு காய்ச்சல் பாதித்து திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு பெண் பரிதாபமாக இறந்தார். இதையடுத்து பலி எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது. கேரள மாநிலம், திருவனந்தபுரம் அருகே உள்ள வர்க்கலா பகுதியை சேர்ந்தவர் ஷாஜி  தாஸ். இவரது மகள் அஸ்வதி (15). இவர் அப்பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதி முடித்துள்ளார். இந்நிலையில் கடந்த இரு வாரங்களுக்கு முன் அஸ்வதிக்கு காய்ச்சலும், வாந்தியும் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கொல்லம் அருகே உள்ள பாரிப்பள்ளி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு நடத்திய பரிசோதனையில் அஸ்வதிக்கு தெள்ளு காய்ச்சல் (ஸ்க்ரப் டைபஸ்) பரவியது தெரியவந்தது. சிகிச்சை பலனின்றி கடந்த 3 தினங்களுக்கு முன் அஸ்வதி பரிதாபமாக இறந்தார். இந்நிலையில், தெள்ளு காய்ச்சலுக்கு திருவனந்தபுரத்தில் மேலும் ஒரு பெண் மரணமடைந்துள்ளர். இந்த காய்ச்சலால் பாதிக்கப்பட்டிருந்த குமரி கேரள எல்லை அருகே உள்ள பாறசாலை பகுதியை சேர்ந்த சுபிதா (38) என்பவர் கடந்த சில தினங்களுக்கு முன் திருவனந்தபுரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் மரணமடைந்தார். இதையடுத்து திருவனந்தபுரம் மாவட்டத்தில் தெள்ளு காய்ச்சல் பாதிக்கப்பட்டு மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்துள்ளது.

* பூச்சிகள் மூலம் பரவுகிறது

ஓரியன்ஷியா சுசுகாமுஷி என்ற பாக்டீரியா மூலம்தான் தெள்ளு காய்ச்சல் பரவுகிறது. எலி, அணில், முயல் போன்ற விலங்குகளில் இந்த நோய்க்கான அணுக்கள் காணப்படும். இவற்றின்  மூலம் தான் மனிதர்களுக்கு இந்த நோய் பரவுகிறது. இந்த விலங்குகளை கடிக்கும் பூச்சிகள் மனிதர்களை கடித்தால் உடனடியாக நோய் பரவும். புல்வெளிகளில் தான் இந்த பூச்சிகள் அதிகமாக காணப்படும். குளிர் காய்ச்சல்,  தலைவலி, உடல் வலி, வறண்ட இருமல் ஆகியவைதான் இந்நோயின் முக்கிய  அறிகுறிகளாகும். சிலருக்கு இந்த நோய் மூளையையும் கடுமையாக பாதிக்கும் வாய்ப்பு உள்ளது.

Related Stories: