2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் பங்கேற்புடன் திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா கோலாகலம்

திருச்செந்தூர்: 2 ஆண்டுகளுக்கு பின்னர் பக்தர்கள் பங்கேற்புடன் திருச்செந்தூரில் இன்று வைகாசி விசாக திருவிழா நடந்தது. இதில் ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து சுவாமி தரிசனம் செய்தனர். வைகாசி மாதம் முருகப்பெருமானின் ஜென்ம நட்சத்திரமான விசாக நட்சத்திரத்தன்று வைகாசி விசாக பெருந்திருவிழா கொண்டாடப்படுகிறது. ஆண்டு முழுவதும் முருகப் பெருமானை தரிசனம் செய்தால் கிடைக்கக் கூடிய பலன், வைகாசி விசாக திருவிழா அன்று வழிபட்டால் கிடைக்கும் என்பது ஐதீகம்.

அறுபடை வீடுகளில் 2ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் இந்த ஆண்டு விசாக திருவிழா கடந்த 3ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழா நாட்களில் தினமும் பகலில் மூலவருக்கு உச்சிகால தீபாராதனை முடிந்ததும், சுவாமி ஜெயந்திநாதர் வள்ளி, தெய்வானையுடன் தங்க சப்பரத்தில் எழுந்தருளி வசந்த மண்டபத்தை சேருவதும் நடந்தது. அங்கு அபிசேகம், அலங்காரம், தீபாராதனை நடந்ததும், சுவாமி, அம்பாள் 11 முறை வசந்த மண்டபத்தை சுற்றி வந்து அங்கு எழுந்தருளி கோயிலை வந்தடைந்தார். விசாக திருவிழாவான இன்று அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டது. 1.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடந்தது. அதிகாலை 2 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம், 2.30 மணிக்கு தீபாராதனை, காலை 9 மணிக்கு மூலவருக்கும், சண்முகருக்கும் உச்சிகால அபிஷேகம் நடந்தது. மாலையில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேக, அலங்கார தீபாராதனை நடக்கிறது.

பின்னர் வசந்த மண்டபத்தை சுவாமி 11 முறை வலம் வரும் வைபவம், விழாவின் முக்கிய நிகழ்வான முனிக்குமாரர்களுக்கு சாப விமோசனம் அளிக்கும் வைபவம் நடக்கிறது. மகா தீபாராதனைக்கு பின்னர் தங்கச் சப்பரத்தில் சுவாமி ஜெயந்திநாதர், வள்ளி, தெய்வானையுடன் எழந்தருளி, கிரிவீதி வலம் வந்து கோயில் சேருகிறார். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் பங்கேற்பின்றி கோயில் வளாகத்திற்குள் மட்டும் விசாக திருவிழா நடந்தது. இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடுகள் முற்றிலும் விலக்கப்பட்ட நிலையில் வைகாசி விசாக திருவிழா நடைபெறுவதால் லட்சக்கணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்ட வண்ணம் இருந்தனர். வைகாசி விசாகத்தில் பங்கேற்பதற்காக கடந்த சில நாட்களாகவே நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களிலிருந்து பாதயாத்திரை பக்தர்கள் பச்சை உடை அணிந்து வந்து கொண்டே இருந்தனர். அவர்கள் கோயில் வளாகத்தில் தங்கி சுவாமி தரிசனம் செய்தனர். நீண்ட வேல்களால் அலகு குத்தியும், காவடி எடுத்து வந்தும் அவர்கள் நேர்த்திக் கடன் செலுத்தினர்.

மேலும் நூற்றுக்கணக்கான பக்தர்கள் கோயில் பிரகாரத்தில் அங்கப்பிரதட்சணம் செய்து வழிபட்டனர். இதனால் கோயில் வளாகமே பக்தர்கள் கூட்டத்தால் நிரம்பி வழிந்தது. விருதுநகர், ராமநாதபுரம், சிவகாசி உள்ளிட்ட பகுதிகளிலிருந்து பக்தர்கள் சர்ப்ப காவடி எடுத்து வருவது வழக்கம். பின்னர் அந்த பாம்பை வள்ளி குகை பின்புறம் விடுவர். ஆனால் இந்த ஆண்டு சர்ப்பக் காவடிக்கு தடை விதிக்கப்பட்டதால் சர்ப்ப காவடி எடுத்து பக்தர்கள் வரவில்லை. பக்தர்கள் பாதுகாப்பாக தரிசனம் செய்வதற்கு தனி வரிசை முறை ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மாவட்டத்தின் பிற ஊர்களிலிருந்து சிறப்பு பஸ்களும், நெல்லையிலிருந்து சிறப்பு ரயிலும் விடப்பட்டிருந்தன.

Related Stories: