காரைக்கால் கடலில் 302 கிலோ மீட்டர் பாய்மர படகு சாகச பயணம்: என்சிசி குழுவினருக்கு உற்சாக வரவேற்பு

காரைக்கால்: என்சிசி மாணவர்களின் பாய்மர படகு சாகச கடல் பயணம் 135 கிலோ மீட்டர் தூரத்தை கடந்து நேற்று காரைக்காலை வந்தனர். அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் அந்தமான் என்சிசி இயக்கத்தின் வழிகாட்டுதலின்படி புதுச்சேரி என்சிசி குழுமம் சார்பில் சமுத்திரகமன் 2022 என்ற பெயரில் புதுச்சேரியில் இருந்து காரைக்கால் வரை 302 கிலோ மீட்டர் தூரத்திற்கு கடல்வழி சாகச பயணத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது.

கடந்த 6ம் தேதி புதுச்சேரியில் இருந்து என்சிசி மாணவ, மாணவிகள் பங்கேற்றுள்ள பெருங்கடல் வழி சாகச பயணத்தை புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் துவக்கி வைத்தார். இந்த சாகச பயணம் புதுச்சேரி, கடலூர் பரங்கிப்பேட்டை, பூம்புகார் வழியாக 135 கிலோமீட்டர் தூரத்தை கடந்து நேற்று காலை வந்தடைந்தது. சாகச குழுவினருக்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து என்சிசி மாணவர்கள் ரத்ததானம் செய்து பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளில் பங்கேற்றனர்.

நேற்று காலை காரைக்காலில் இருந்து புறப்பட்ட என்சிசி மாணவ மாணவிகள் புதுச்சேரியை நோக்கி மீண்டும் 160 கிலோமீட்டர் சாகச கடல் பயணத்தை தொடங்கினர். நிகழ்ச்சியில் காரைக்கால் மாவட்ட முதுநிலை காவல் கண்காணிப்பாளர் லோகேஸ்வரன் கலந்துகொண்டு கொடியசைத்து துவக்கி வைத்தார். மேலும் இந்த சாகசப் பயணத்தில் பங்கேற்றுள்ள மாணவ மாணவிகளை வெகுவாக பாராட்டினார்.

இந்த கடல் சாகச வீரர்கள் மீண்டும் புதுச்சேரியை வருகிற 16ம் தேதி புதுச்சேரியில் உள்ள தேங்காய்த்திட்டு துறைமுகத்தில் சாகச பயணத்தை நிறைவு செய்ய உள்ளனர். இந்த சவாலில் என்சிசி சேர்ந்த 35 மாணவர்களும் 25 மாணவிகளும் கலந்து கொண்டுள்ளனர். இவர்கள் சுழற்சிமுறையில் பாய்மர படகில் இறங்கி காற்றின் திசை அதன் வேகம் ஆகியவற்றுக்கு ஏற்ப படகுகளை செலுத்தி சாகசம் புரிந்து வருகின்றனர்.

Related Stories: