திருவலம் பொன்னையாற்று பாலம் சீரமைப்பு பணிகள் நிறைவு வாகன போக்குவரத்து தொடக்கம்

திருவலம் :  திருவலம் இரும்பு பாலம் சீரமைக்கும் பணி நிறைவடைந்ததையடுத்து பாலத்தில் வாகன போக்குவரத்திற்கு நேற்று காலை 8 மணிக்கு திறக்கப்பட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியடைந்தனர். வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா திருவலம் பேரூராட்சி பொன்னையாற்றின் குறுக்கே ஆங்கிலேயர்களால் கட்டப்பட்ட 85 ஆண்டுகள் பழமை வாய்ந்த வரலாற்று சிறப்புமிக்க ‘‘ராஜேந்திரா இரும்பு பாலம்’’ இந்திய வரலாற்றில் நினைவு சின்னமாக உள்ளது. இப்பாலம் நெடுஞ்சாலைத் துறையின் கட்டுபாட்டில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் பாலத்தின் உள்ள சாலையில் 12 பாலங்களுக்கு இடையேயான 11 இணைப்பு பகுதிகளில் விரிசல்கள் ஏற்பட்டு அதிலிருந்த கான்கிரீட் சிமெண்ட், ஜல்லி கலவைகள் பெயர்ந்து காணப்பட்டன.  இதுகுறித்து ‘‘தினகரன்’’ நாளிதழில் கடந்த மார்ச் 14-ந் தேதி படத்துடன் செய்தி வெளியானது. இதனையடுத்து, நெடுஞ்சாலைதுறையினர் பாலத்தில் உள்ள விரிசல்களுக்கு தார்கலவை பூசி தற்காலிக சீரமைப்பு செய்தனர். தொடர்ந்து பாலத்தின் சாலையில் ஏற்பட்டுள்ள விரிசல்களை நிரந்தரமாக சீரமைக்க வேண்டுமென மார்ச் 24-ந் தேதி மீண்டும் ‘‘தினகரன்’’ நாளிதழில் படத்துடன் செய்தி வெளியிடப்பட்டது. இதனையடுத்து சம்மந்தப்பட்ட நெடுஞ்சாலை துறையினர், தனியார் ஒப்பந்ததாரர் மூலம் சீரமைக்கும் பணிகளை மேற்கொண்டனர். இதற்காக, ஏப்ரல் மாதம் 27-ந் தேதி முதல் பாலத்தில் போக்குவரத்திற்கு தடை செய்யப்பட்டது.

இந்நிலையில் 12 பாலங்களுக்கான 11 இணைப்பு பகுதிகளில் இரும்பு சட்டங்கள் கம்பிகள் இணைப்புடன் புதைக்கப்பட்டு சிமென்ட் கான்கிரீட் தளம் அமைத்து தொடர்ந்து அதன்மீது தார்கலவைபூச்சு மூலம் சீரமைக்கும் பணிகள் மற்றும் பாலத்தின் சாலையில் இருந்த 36 சிறுவிரிசல்களுக்கும் தார்பூசி சீரமைக்கப்பட்டது. இதனையடுத்து வேலூர் மாவட்ட நெடுஞ்சாலைத்துறையின் காட்பாடி உதவி கோட்டப்பொறியார் சுகந்தி தலைமையில் நெடுஞ்சாலை துறையினர் நேற்று முன்தினம் ஆய்வு செய்து வாகன போக்குவரத்திற்கு திறக்க உத்தரவிட்டனர். இதைத்தொடர்ந்து, நேற்று காலை 8 மணியளவில் பாலத்திற்கு பூஜைகள் செய்து பின்னர் பாலத்தில் வாகனங்களின் போக்குவரத்திற்கு திறக்கப்பட்டது. இதனால், அவ்வழியாக பைக் மற்றும் பல்வேறு வாகனங்களில் சென்று வரும்  ஓட்டிகள் பெரும் மகிழ்ச்சியுடன் பாலத்தில் சென்றனர்.

Related Stories: