கொரோனா கால மருத்துவ சிகிச்சை நிலுவை தொகையை உடனே வழங்கவேண்டும்: ஓய்வூதியர் சங்க மாநாட்டில் தீர்மானம்

மதுராந்தகம்: தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தின் மதுராந்தகம் வட்ட முதல் மாநாடு நேற்று மதுராந்தகத்தில்  நேற்று நடந்தது. இதில், வட்ட தலைவர் வி.பொன்னுசாமி தலைமை தாங்கினார். முன்னதாக வட்ட துணை தலைவர் ஐ.முனியன் அனைவரையும் வரவேற்றார். மாவட்ட தலைவர் கே.வி.வேதகிரி கலந்துகொண்டு கொடியேற்றி வைத்தார். வட்ட செயலாளர் கே.கோபாலகிருஷ்ணன் வேலை அறிக்கை வாசித்தார்.  பொருளாளர் என்.ராமலிங்கம் வரவு - செலவு அறிக்கை வாசித்தார். இந்த மாநாட்டின்போது, நிலுவையில் உள்ள அகவிலைப்படியை ரொக்கமாக வழங்கிட வேண்டும். கொரோனா காலத்தில் மருத்துவ சிகிச்சை பெற்ற 20 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஓய்வூதியதாரர்களின் நிலுவை தொகையை உடனே வழங்க வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி எழுத்தர், கிராம உதவியாளர் போன்ற தொகுப்பூதிய ஊழியர்களுக்கும் குறைந்தபட்ச ஓய்வூதியம் 7,850 மாதந்தோறும் வழங்கிட வேண்டும். பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும். புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். 70 வயது ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் வழங்க வேண்டும். குடும்ப பாதுகாப்பு நிதி ஒரு லட்சம் ரூபாய் வழங்க வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், நிர்வாகிகள் சந்திரபாபு, ராஜலட்சுமி, கஜேந்திரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தின் முடிவில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

Related Stories: