ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் கல்லீரல் கொழுப்பு சிகிச்சை பிரிவு: சுகாதாரத்துறை செயலாளர் தொடங்கி வைத்தார்

தண்டையார்பேட்டை: ஸ்டான்லி அரசு மருத்துவமனையில், குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கான கல்லீரல் கொழுப்பு சிகிச்சை பிரிவு மற்றும் கண்காட்சியை சுகாதாரத்துறை செயலாளர் டாக்டர் ராதாகிருஷ்ணன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது: ஸ்டான்லி மருத்துவமனையில் புதிதாக கல்லீரல் கொழுப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. இதில் குடிப்பழக்கம் இல்லாதவர்களுக்கு ஏற்படும் பாதிப்புக்கு சிகிச்சை அளிக்கப்படும். இந்த நோய் குறித்த பாதிப்புகள் பலருக்கு தெரிவதில்லை.

 அதிக எண்ணெய் உள்ள உணவுகள் பயன்படுத்துவது, பாஸ்ட்புட் உணவுகள் அதிகம் சாப்பிடுவது, மது அருந்துவது போன்றவற்றால் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. இதற்கு சிறப்பு சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது. பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கண்காட்சியும் அமைக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பு தற்போது ஜூன் மாதத்தில் அதிகமாக காணப்படுகிறது. மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா போன்ற மாநிலங்களை காட்டிலும் தமிழகத்தில் தொற்று குறைவாகத்தான் உள்ளது. 5 மாவட்டங்களில் மட்டும்தான் சற்று அதிகமாக உள்ளது. பி4. பி5 ஒமிக்ரான் உருமாறிய தொற்று கண்டறியப்பட்டு உள்ளது.

ஈரோடு சிறுமியின் கருமுட்டை‌ விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் உத்தரவின்பேரில் மருத்துவ வல்லுநர் குழு அமைக்கப்பட்டு, இதுகுறித்து மருத்துவமனை மருத்துவர்களிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். அந்த அறிக்கை வந்ததும் மேல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இந்த பிரச்னையில் பாலியல் ரீதியாக போக்சோ சட்டத்தில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிமாநில மருத்துவமனையிலும் இதில் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வல்லுநர் குழு அறிக்கையின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படும்,’’ என்றார்.நிகழ்ச்சியில். ஸ்டான்லி மருத்துவமனை முதல்வர் பாலாஜி, மருத்துவ பேராசிரியர்கள் ரேவதி, ஜஸ்வந்த் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Related Stories: