வாலாஜாபாத் அருகே கட்டவாக்கம் கூட்டு சாலையில் சிக்னல் அமைக்க வேண்டும்: வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

வாலாஜாபாத்: வாலாஜாபாத் அருகே கட்டவாக்கம் கூட்டு சாலையில் சிக்னல் அமைக்கவேண்டம் என வாகன ஓட்டிகள் வலியுறுத்தியுள்ளனர்.வாலாஜாபாத்தில் - தாம்பரம் செல்லும் சாலையை ஒட்டி சேர்க்காடு, ஊத்துக்காடு, கட்டவாக்கம், நத்தாநல்லூர், தேவரியம்பாக்கம், வாரணவாசி உள்ளிட்ட நூற்றுக்கணக்கான கிராமங்கள் உள்ளன. இந்நிலையில், வாலாஜாபாத் - தாம்பரம் சாலை கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு 6 வழிச்சாலையாக தரம் உயர்த்தும் பணி நடைபெற்று வந்தது. தற்போது இப்பணி முடியும் தருவாயில் உள்ளது. இந்நிலையில், ஒரு சில இடங்களில் கிராம கூட்டு சாலைகள் அமைந்துள்ளது. இந்தக் கூட்டுச் சாலை உள்ள பகுதிகளில் முறையான முன் எச்சரிக்கை பலகைகள், பிரதிபலிப்புகள் அமைக்கப்படவில்லை என்பது இந்த சாலை வழியாக செல்லும் வாகன ஓட்டிகளின் குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கூட்டு சாலை பகுதியில் தொழிற்சாலைகளுக்கு செல்லும் நூற்றுக்கணக்கான பஸ், லாரி, வேன் உள்ளிட்ட வாகனங்கள் நாள்தோறும் சென்று வருகின்றன. இந்த கூட்டு சாலை சந்திப்பில் முறையான சிக்னல் மற்றும் விபத்து பகுதி வாகனங்களை முன்கூட்டியே மெதுவாக இயக்க நடவடிக்கை மேற்கொள்வது உள்ளிட்ட எந்தவித மதிப்பளிப்பு ஸ்டிக்கர்கள் இல்லை.

இதுபோன்ற சூழ்நிலையில், நாள்தோறும் வாகனங்கள் இந்தக் கூட்டுச் சாலையில் திரும்பும்போது விபத்துக்கள் ஏற்படுவது மட்டுமின்றி உயிரிழப்புகளும் நாள்தோறும் அரங்கேறி வருகின்றன. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், ‘வாலாஜாபாத் அடுத்த கட்டவாக்கம் கூட்டு சாலை இந்த சாலையை ஒட்டி பல்வேறு தொழிற்சாலைகள் உள்ளது.இந்த தொழிற்சாலைகளுக்கு இருசக்கர வாகனங்களில் செல்லும் தொழிலாளர்கள் மட்டுமின்றி கார், பஸ் உள்பட பல்வேறு வாகனங்களும் நாள்தோறும் இரவு, பகல் என விபத்துக்குள்ளாகும் நிலை இப்பகுதியில் காணப்படுகிறது. இது குறித்து பலமுறை நெடுஞ்சாலை துறைக்கு தகவல் தெரிவித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை.  சமீபகாலமாக இப்பகுதியில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்பட்டு வருகிறது.இதனால், வாகன ஓட்டிகளுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இப்பகுதியில் வாகனங்களை மெதுவாக இயக்கும் வகையில் சிக்னல் மற்றும் உயர் கோபுர மின் விளக்கு அமைத்து விபத்து இல்லாத பகுதியாக இந்த கட்டவாக்கம் கூட்டுச்சாலை பகுதியை மாற்ற  மாவட்ட நிர்வாகமும் முன்வர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

Related Stories: