எல்கேஜி, யுகேஜி வகுப்பு விவகாரம் அங்கன்வாடி மையங்கள் பழைய நடைமுறையில் செயல்படும்: தொடக்க கல்வித்துறை விளக்கம்

சென்னை: தமிழக தொடக்க கல்வித்துறை இயக்குனர் அறிவொளி வெளியிட்டுள்ள அறிக்கை: 2019-20ம் கல்வி ஆண்டில் பிறப்பிக்கப்பட்ட சமூக நலம் மற்றும் சத்துணவு திட்ட அரசாணையின்படி 52 ஆயிரத்து 933 குழந்தைகள் பயன்பெறும் வகையில் 2,381 அங்கன்வாடி மையங்களில் பரீட்சார்த்த முறையில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் தொடங்கப்பட்டன. அவற்றில் தொடக்கப் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். அவர்களுக்கு குழந்தைகளை கையாளும் திறமை குறைந்தவர்களாகவும், புரிதல்  இல்லாதவர்களாகவும் இருந்தனர். அதனால் 2013-14ம் ஆண்டுக்கு பிறகு மேலும் ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை.

மேலும் தொடக்க கல்வி இயக்ககத்தில் ஓய்வு பெறும் ஆசிரியர்கள் எண்ணிக்கையும் அதிகரித்தது. தொடக்கப் பள்ளிகளில் கற்பித்தலில் தொய்வு ஏற்பட்டது. மேலும் தொடக்கப் பள்ளிகளில் 4,863 காலிப்பணியிடங்கள் ஏற்பட்டதுடன் 3,800 பள்ளிகள் ஓராசிரியர் பள்ளிகளாக மாறின. கொரோனா காலத்தில் ஏற்பட்ட கற்றல் பாதிப்பு அதை கட்டுப்படுத்த எடுத்த நடவடிக்கைகள் காரணமாக அரசுப் பள்ளிகளில் 5 லட்சத்துக்கும் அதிகமான மாணவர்கள் சேர்ந்தனர். குறிப்பாக 1 முதல் 5ம் வகுப்புகளில் 2 லட்சத்து 80 ஆயிரம் குழந்தைகள் சேர்ந்துள்ளனர். அதனால் 4,500க்கும் மேற்பட்ட ஆசிரியர் பணியிடங்கள் தேவை ஏற்பட்டுள்ளது.

ஏற்கனவே உள்ள காலிப்பணியிடங்களை சேர்த்தால் 9,000 ஆசிரியர் பணியிடங்கள் தேவை. இதுகுறித்து அனைத்து மாவட்ட உயர்மட்ட அலுவலர்களுடன் நடத்திய கூட்டத்துக்கு பிறகு, எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்கள் மீண்டும் தொடக்கப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர். அதனால் அங்கன்வாடி மையங்களில் ஏற்கனவே இருந்த நடைமுறைகளை பின்பற்றி இந்த ஆண்டு முதல் ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டத்தின்  அங்கன்வாடி உதவியாளர்களை தற்காலிகமாக நியமிக்கவும் முடிவு எடுக்கப்பட்டது.

Related Stories: