கூடுவாஞ்சேரி: வண்டலூர் அருகே வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்து வந்த 13 குரங்குகள் ஒரே நாளில் வனத்துறையினர் பிடித்து சென்றனர். செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் வண்டலூர் அடுத்த நெடுங்குன்றம் ஊராட்சியில், நெடுங்குன்றம், சதானந்தபுரம், ஆலப்பாக்கம், கொளப்பாக்கம், அண்ணாநகர், மப்பேடு புத்தூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஊராட்சிக்கு உட்பட்ட கொளப்பாக்கம் அண்ணாநகரில் 50க்கும் மேற்பட்ட குரங்குகள் வீடுகளில் புகுந்து அட்டகாசம் செய்து வந்தது. இதுகுறித்து நெடுங்குன்றம் ஊராட்சி மன்ற தலைவர் வனிதாஸ்ரீசீனிவாசன், 13வது வார்டு கவுன்சிலர் புஷ்பாமுருகன் ஆகியோர் வேளச்சேரியில் உள்ள வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து வந்த வனத்துறையினர் அப்பகுதியில் கூண்டில் பழங்களை பொருத்தி கண்காணித்து வந்தனர். இதனை அடுத்து பழங்களை சாப்பிடுவதற்காக கூண்டின் உள்ளே சென்ற 13 குரங்குகள் பிடிபட்டது. மேலும், ஒரே நாளில் பிடிபட்ட 13 குரங்குகளை கிண்டியில் உள்ள தலைமையிடத்து வனச்சரகத்தில் கொண்டு சென்று விடப்பட்டது. மேலும், பிடிபட்ட 13 குரங்குகளுக்கும் 10 நாட்களாக பராமரிக்கப்பட்டு அவைளுக்கு தேவையான மருத்துவ வசதி செய்து கொடுக்க பட்ட பின்னர் செஞ்சி அல்லது திருவண்ணாமலை பகுதியில் உள்ள குரங்குகள் பாதுகாப்பு மையத்திற்கு கொண்டு சென்று விடப்படும் என்று வனத்துறையினர் தெரிவித்தனர். மேலும், பூண்டில் ஒரே நாளில் பிடிபட்ட 13 குரங்குகளால் அப்பகுதியில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.