மதுரையில் ரூ.114 கோடியில் கலைஞர் நினைவு நூலக கட்டுமான பணியை முதல்வர் பார்வையிட்டார்

மதுரை: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டத்தில் சீரமைக்கப்பட்ட சமத்துவபுரம் திறப்பு மற்றும் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க நேற்று மாலை மதுரை வந்தார். மதுரையில் முத்தமிழறிஞர் கலைஞர் நூலக கட்டுமான பணியை அவர் நேற்று மாலை பார்வையிட்டு, அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னையில் இருந்து விமானம் மூலம் நேற்று மாலை 6.30 மணிக்கு மதுரை விமான நிலையம் வந்தார். அங்கிருந்து, காரில், மதுரை - நத்தம் சாலையில் உள்ள பொதுப்பணித் துறை வளாகத்தில் ரூ.114 கோடியில் 7 தளங்களுடன் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நூலகத்தின் கட்டுமானப்பணியை பார்வையிட வந்தார். அவரை, அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி, மேயர் இந்திராணி, எம்பி சு.வெங்கடேசன். கலெக்டர் அனீஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜித் சிங் காலோன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

அப்போது, கட்டுமான பொறியாளர் சத்தியமூர்த்தி தலைமையில் அதிகாரிகள் நூலகத்தின் கட்டுமானம் குறித்து விளக்கினர். கலைஞர் நூலகத்தில் எங்கெங்கு என்னென்ன அமைகிறது என்பது குறித்து, தரைத்தளத்தில் கட்டுமானத்திற்கான பல்வேறு வரைபடங்கள் டிஸ்பிளே செய்யப்பட்டிருந்தது. அதனை பார்வையிட்ட முதல்வர், நூலகத்தில் இடம்பெறும் வசதிகள் குறித்து அதிகாரிகளிடம் முழுமையாக கேட்டறிந்தார். தொடர்ந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், முதல் மாடியில் தலா 100 அடி நீள, அகலத்திலான கலைஞர் அரங்கம் அமைந்துள்ள இடத்தை பார்வையிட்டார். இங்கு கலைஞர் பல்வேறு தலைப்புகளில்  எழுதிய 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட படைப்புகள் வைக்க  இருக்கும் இடத்தையும் அவர் பார்வையிட்டார்.

நூலக கட்டுமானப் பணிகளை விரைந்து  முடிக்கவும், தேவையான அத்தனை வசதிகளை ஏற்படுத்தவும் பொதுப்பணித்துறை மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார். பணிகளை எப்போது முடித்து, மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரலாம் எனவும்  முதல்வர் அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். தொடர்ந்து அரை மணிநேரம் நடந்த ஆலோசனைக்கு பிறகு நூலகம் முன்பகுதியில் கலைஞர் சிலை அமைக்கப்பட இருக்கிறது. அந்த  இடத்தையும் முதல்வர் பார்வையிட்டார். முதல்வர் மு.க.ஸ்டாலினுடன், அமைச்சர்கள் எ.வ.வேலு, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, பி.மூர்த்தி, பெரியகருப்பன், மகேஷ் பொய்யாமொழி உள்ளிட்டோரும் உடனிருந்தனர். தொடர்ந்து நேற்றிரவு முதல்வர் மதுரை மாவட்டம் மேலூர் அருகே தும்பைப்பட்டியில் உள்ள தனியார் விடுதிக்கு சென்று அங்கு தங்கினார்.

* சமத்துவபுரம் திறப்பு: முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று சிவகங்கை மாவட்டம், சிங்கம்புணரி தாலுகாவில் உள்ள வேங்கைபட்டியல் பெரியார் நினைவு சமத்துவபுரத்தையும் ரேஷன் கடையையும் திறந்து வைக்கிறார். பின்னர் அங்கிருந்து காலை 10 மணியளவில் திருப்புத்தூர் கிளம்பிச் செல்லும் முதல்வர், அருகே காரையூரில் அமைக்கப்பட்டுள்ள ஒரு லட்சம் பேர் அமரும் வகையில் அமைந்துள்ள பிரம்மாண்ட அரங்கில் நடக்கும் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கிறார். இங்கு பல்வேறு துறைகள் மூலம் 40 ஆயிரம் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார்.

Related Stories: