புழல் ஏரியை ஒட்டியுள்ள நீர்ப்பிடிப்பு பகுதி நிலங்களை பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கான நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும்: அரசுக்கு எடப்பாடி கோரிக்கை

சென்னை: அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை:சென்னை பெருநகர் பகுதிக்கான இரண்டாவது முழுமைத் திட்டத்தில் நிலங்களின் வகைப்பாடு சர்வே எண் வாரியாக பட்டியலிடப்பட்டுள்ளது. அதன் அடிப்படையிலேயே கட்டுமான திட்டங்களை மேற்கொள்ள வேண்டும். இதில் உள்ள ஏரியை ஒட்டியுள்ள பெரும்பாலான நிலங்கள் நீர்ப்பிடிப்பு பகுதிகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன. இப்பகுதியில் எந்தவித கட்டுமான திட்டங்களுக்கும்அனுமதி கிடையாது என முழுமை திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. பொது சட்ட விதிகளிலும், இப்பகுதியில் கட்டுமான திட்டங்களுக்கு அனுமதி கிடையாது என குறிப்பிடப்பட்டுள்ளது. இத்தடைகள் இருந்தாலும், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம், உள்ளாட்சி மற்றும் வருவாய் துறை அதிகாரிகள் ஒத்துழைப்புடன் விதி மீறல் கட்டுமானங்கள் அதிகரித்துள்ளன. இந்த விதி மீறல் கட்டுமானங்களை வரைமுறைப்படுத்த வாய்ப்பில்லாத நிலையில், இவற்றின் மீது அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை. ஏற்கெனவே, இங்குள்ள மோரை, வெள்ளானூர் கிராமங்களில் 16 வெவ்வேறு சர்வே எண்களுக்கு உட்பட்ட 120 ஏக்கர் நிலத்தை வகைப்பாடு மாற்றம் செய்வதற்கானகோரிக்கை சிஎம்டிஏ-க்கு வந்தது. பொதுமக்கள் எதிர்ப்பு காரணமாக இந்த கோரிக்கை நிராகரிக்கப்பட்டது. இந்நிலையில் சம்பந்தப்பட்ட நில உரிமையாளர்கள் அரசிடம் மேல்முறையீடு செய்தனர் என்றும், அவர்களது மேல்முறையீட்டை இந்த அரசு ஏற்றுக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன்படி, மேல்முறையீட்டில் குறிப்பிடப்பட்டுள்ள கட்டுமான திட்டங்கள் தடை செய்யப்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதியாக உள்ள நிலங்களின் வகைப்பாட்டை, நிறுவன பயன்பாட்டிற்காக மாற்றுவதற்கான நடவடிக்கையை மேற்கொள்ளலாம் என்றும், மேம்பாட்டுப் பணிகள் 2008 செப்டம்பர் 2ம் தேதிக்கு முன் நடந்து இருப்பதற்கான ஆதாரங்கள் இருந்தால் அதன் அடிப்படையில் வகைப்பாட்டை மாற்றலாம் எனவும் உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏற்கெனவே நீர்வழி ஆக்கிரமிப்புகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அரசுக்கு உயர்நீதிமன்றம் வழங்கிய பல உத்தரவுகளை மனதில் கொண்டு, புழல் ஏரியை ஒட்டி நீர்ப்பிடிப்பு பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ள நிலங்களில், குறிப்பிட்ட சில தனியார் நிறுவன பயன்பாட்டுக்கு மாற்றலாம் என வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச்சி துறை சமீபத்தில் வழங்கிய உத்தரவை உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று  அரசை வலியுறுத்துகிறேன்.

Related Stories: