பொள்ளாச்சி அருகே யானையின் மண்டையோடு கண்டுபிடிப்பு

ஆனைமலை: பொள்ளாச்சி அருகே டாப்சிலிப் பகுதியில் யானையின் மண்டையோடு உள்ளிட்ட எலும்புகள் கண்டெடுக்கப்பட்டது. கோவை மாவட்டம் பொள்ளாச்சியை அடுத்துள்ள ஆனைமலை புலிகள் காப்பகம், உலாந்தி வனச்சரகம் டாப்ஸ்லிப் வனப்பகுதியில், வனத்துறை வேட்டை தடுப்பு காவலர்கள் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, தமிழக- கேரளா எல்லை வாய்க்கால், நம்பர் 1 பகுதியில் யானையின் மண்டையோடு கிடைப்பதை கண்டு, வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தனர்.

இதையடுத்து, உலாந்தி வனச்சரகர் மற்றும் மருத்துவ குழுவினர் சம்பவ இடத்திற்கு வந்து வாய்க்காலில் வந்த தண்ணீரை நிறுத்தி பார்த்தபோது யானையின் தலை எலும்புக்கூடு இருப்பதை உறுதி செய்தனர். அதன் அருகில் யானையின் உடலின் எலும்பு துண்டுகளும் இருந்தன. இதை சேகரித்த வனத்துறையினர், இறந்த யானை ஆணா? பெண்ணா? என்பதை கண்டறிய, எலும்பு பாகங்களை மரபணு பரிசோதனைக்காக சென்னை ஆய்வகத்திற்கு அனுப்ப உள்ளனர். ஆய்வு முடிவுகள் வந்த பிறகு விசாரணை தொடங்கப்படும் என்று வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: