சுடுகாட்டுக்கு சாலை வசதி கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்-சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் நடந்தது

சித்தூர் : சித்தூர் கலெக்டர் அலுவலகம் முன் சுடுகாட்டுக்கு சாலை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டுமென கிராம மக்கள் 30க்கும் மேற்பட்டோர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது, கிராம மக்கள் கூறியதாவது: சித்தூர் மாவட்டம் பெனுமூர் மண்டலம் கங்கு பள்ளி கிராமத்தில் 60க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. பல நூறு ஆண்டுகளாக எங்கள் கிராமத்தில் யாராவது உயிரிழந்தால் கிராமம் அருகே உள்ள சுடுகாட்டில் அடக்கம் செய்து வந்தோம்.

கடந்த வாரம் எங்கள் கிராமத்தில் 14 வயது சிறுமி நீரில் மூழ்கி பலியானார். அவருடைய சடலத்தை சுடுகாட்டில் அடக்கம் செய்வதற்கு எடுத்து சென்று கொண்டிருந்தோம். ஆனால் கிராமத்தை சேர்ந்த 2 பேர் எங்களுக்கு சொந்தமான நிலத்தில் நீங்கள் எவ்வாறு சுடுகாட்டுக்கு செல்லலாம் என தெரிவித்து சடலத்தை அடக்கம் செய்ய வழி விடாமல் தடுத்து நிறுத்தினர்.

இருப்பினும் நாங்கள் அவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு சடலத்தை அடக்கம் செய்தோம். அதேபோல் நேற்றுமுன்தினம் எங்கள் கிராமத்தை சேர்ந்த முதியவர் ஒருவர் உயிரிழந்தார். அவருடைய சடலத்தை எடுத்துச் செல்ல வழிவிடாமல் தடுத்து நிறுத்தினார்கள்.

இதனால் விவசாய நிலத்தில் சடலத்தை அடக்கம் செய்தோம். பல நூறு ஆண்டுகளாக எங்கள் கிராமத்தை சேர்ந்த மக்கள் சுடுகாட்டில் அடக்கம் செய்து வந்தோம். தற்போது சுடுகாட்டுக்கு செல்ல வழிவிடாமல் எங்கள் கிராமத்தை சேர்ந்த இரண்டு பேர் வழிமறித்து செல்லவிடாமல் தடுத்து வருகிறார்கள்.இதுகுறித்து காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததற்கு போலீசார் மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் புகார் தெரிவிக்கும்படி தெரிவித்தனர். இதனால் நாங்கள் மண்டல வருவாய் துறை அலுவலகத்தில் புகார் தெரிவித்தோம். ஆனால் மண்டல வருவாய் துறை அதிகாரி ஒரு தலைப்பட்சமாக செயல்பட்டு வருகிறார்.

அவர்களிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு அவர்களுக்கு ஆதரவாகவே செயல்படுகிறார். எனவே, கலெக்டர் உடனடியாக நடவடிக்கை எடுத்து எங்களுக்கு நியாயம் செய்வார்கள் என நாங்கள் கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகிறோம்.  எனவே, கலெக்டர் உடனடியாக எங்கள் கிராமத்தில் உள்ள சுடுகாட்டுக்கு சாலை வசதியை ஏற்படுத்தி தர வேண்டும். இல்லையென்றால் கிராம மக்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து கலெக்டர் அலுவலகம் முன்பு மாபெரும் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபடுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Related Stories: