பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்த சம்பவம் குழந்தை கொலையில் 2 பெண்களிடம் விசாரணை-வேலூர் சரக டிஐஜி தகவல்

அரக்கோணம் : அரக்கோணத்தில் பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து ஆண் குழந்தை கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் 2 பெண்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி ஆனிவிஜயா கூறினார்.ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணம் அடுத்த தோல்ஷாப் பகுதியை சேர்ந்தவர் மனோ(22), இவரது மனைவி அம்சாநந்தினி(21). இவர்களுக்கு கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணமான நிலையில், கடந்த 45 நாட்களுக்கு முன்பு ஆண் குழந்தை பிறந்தது. இந்நிலையில் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் தூங்கிக்கொண்டிருந்த குழந்தையை தூக்கிச்சென்ற மர்மநபர்கள் வீட்டின் பக்கவாட்டில் உள்ள கழிவறையில் சுமார் 20 லிட்டர் பக்கெட் தண்ணீரில் மூழ்கடித்து கொலை செய்தனர்.

இதுதொடர்பாக குழந்தையின் தந்தை மனோ, தாய் அம்சாநந்தினி, மனோவின் தாய் இளமதி என்ற கீதா மற்றும் மனோவின் நெருங்கிய உறவினர்களான 2 பெண்களிடம் அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் தலைமையிலான போலீசார் பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், வேலூர் சரக டிஐஜி ஆனி விஜயா நேற்று அரக்கோணம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு வந்தார். அங்கு டிஎஸ்பி புகழேந்தி கணேஷிடம் குழந்தை கொலை வழக்கு தொடர்பாக விசாரணை குறித்து கேட்டறிந்தார். மேலும் வழக்கில் சந்தேகப்படும்படியாக போலீஸ் நிலையம் அழைத்துவரப்பட்ட 2 பெண்களிடம் டிஐஜி நேரடியாக விசாரணை மேற்கொண்டார்.

பின்னர் டிஐஜி ஆனிவிஜயா நிருபர்களிடம் கூறுகையில், ‘கைக்குழந்தை தண்ணீரில் மூழ்கடிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடந்து வருகிறது. சொத்துக்காக, குழந்தை கொலை செய்யப்பட்டதா? அல்லது வேறு ஏதேனும் பிரச்னைகள் உள்ளதா? என்பது குறித்தும் பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குழந்தையின் பெற்றோர் மற்றும் பாட்டி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. மேலும், குழந்தையின் தந்தைக்கு நெருக்கமான உறவினர்களான 2 பெண்களிடம் தொடர்ந்து தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முழுமையான விசாரணைக்கு பிறகுதான் குற்றவாளிகளை அடையாளம் காண முடியும்’ என்றார். பேட்டியின்போது, அரக்கோணம் டிஎஸ்பி புகழேந்தி கணேஷ் உடனிருந்தார்.

வேலூர் சரகத்தில் 21 சதவீதம் போலீசார் பற்றாக்குறை

டிஐஜி ஆனிவிஜயா கூறுகையில், ‘வேலூர் சரகத்தில் 21 சதவீதம் அளவிற்கு போலீசார் பற்றாக்குறை உள்ளது. அந்த பற்றாக்குறை படிப்படியாக சரிசெய்யப்படும். குறிப்பாக, அரக்கோணம் சப்-டிவிஷனில்  அதிகளவில் போலீசார் பற்றாக்குறை உள்ளது. தற்போது போலீசார் சிலர் பயிற்சியில் உள்ளனர். அவர்கள், பயிற்சி முடிந்தவுடன் பற்றாக்குறையாக உள்ள காலியிடங்கள்  நிரப்பப்படும். கஞ்சா கடத்தல் தொடர்பாக, ஏற்கனவே பலர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், கஞ்சா விற்பனையில் ஈடுபடுபவர்கள் தொடர்ந்து கண்காணித்து கைது செய்யப்படுவார்கள். அரக்கோணம், நெமிலி, தக்கோலம் போன்ற இடங்களில் நடக்கும் ஒரு சில நிதி மோசடிகள் குறித்து  பொருளாதார குற்றப் பிரிவினர் தொடர்ந்து கண்காணித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வார்கள்’ என்றார்.

Related Stories: