சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் தீ விபத்து: கண்ணாடிகளை உடைத்து வெளியேறிய ஊழியர்கள்

சென்னை: சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ரஷ்ய கலாச்சார மையத்தில் ஏற்பட்ட தீ விபத்தால் உள்ளே பணியாற்றிய ஊழியர்கள் கட்டிடத்தின் கண்ணாடிகளை உடைத்து வெளியேறினர். தீயணைப்பு வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. சென்னை ஆழ்வார்பேட்டை கஸ்தூரி ரங்கன் சாலையில் ரஷ்ய கலாச்சார மையம் இயங்கி வருகிறது. இந்த மையத்தில் நேற்று காலை வழக்கம் போல் ஊழியர்கள் பணியாற்றி கொண்டிருந்தனர். அப்போது முதல் மாடியில் உள்ள ரஷ்யா மொழி ஆசிரியர்களின் அறையில் இருந்து திடீரென கரும் புகை வெளியேறியது.

இதை கவனித்த ஊழியர்கள் உடனே தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர். அதற்குள் தீ  அறை முழுவதும் பரவியது. இதனால் அங்கு பணியாற்றிய ஊழியர்கள் கட்டிட கண்ணாடிகளை உடைத்து கொண்டு வெளியேறினர்.

பின்னர் தகவலின்படி மயிலாப்பூர், தேனாம்பேட்டை பகுதியில் இருந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் கடுமையாக போராடி தீயை அனைத்தனர். வீரர்கள் விரைந்து செயல்பட்டதால் உயிரிழப்பு தவிர்க்கப்பட்டது. இந்த தீ  விபத்தில் கலாச்சார மையத்தில் உள்ள விலை உயர்ந்த பொருட்கள் எரிந்து நாசமானதாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனாம்பேட்டை போலீசார் விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் ஏசியில் ஏற்பட்ட மின் அழுத்தம் காரணமாக தீ விபத்து ஏற்பட்டது தெரியவந்தது. இருந்தாலும், ரஷ்ய கலாச்சார மையம் சார்பில் சேதம் குறித்து எந்தவித தகவலும் தெரிவிக்கவில்லை. இந்த தீ விபத்தால் சிறிது நேரம் ஆழ்வார்பேட்டையில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: